கோகுல்ராஜ் கொலை வழக்கு-10 பேர் குற்றவாளிகள்: தீர்ப்பு

politics

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை தேடி அலைந்து கொண்டிருந்த நிலையில், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உயிரிழந்து கிடந்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இவ்வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பின்பு, இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் மதுரை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இதுவரை 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில், மார்ச் 5ஆம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே இருந்தது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம், செல்வகுமார், யுவராஜின் சகோதரர் தங்கதுரை, சதீஷ்குமார், பிரபு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வழக்கில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *