அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோமா என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
திருச்சியில் இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “திமுகவின் முன்னோடிகளான நீதிக் கட்சியும், திராவிடர் கழகமும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே இருந்தனர். இன்று திமுக அதனை எதிரொலித்து வருகிறது. காந்தியாக இருக்கட்டும், யாராக இருக்கட்டும். நாடு இரண்டாக பிரிந்த சமயத்தில் யாரின் அனுமதியைப் பெற்று காங்கிரஸ் கட்சியினர் நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தினர்” என்று கேள்வி எழுப்பினார்.
சொந்த நாட்டு மக்களை மதரீதியான பிரச்சினையை ஏற்படுத்தி, தனி நாடாகப் பிரித்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்ததற்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய பொன்.ராதாகிருஷ்ணன், “2021-ல் தமிழகத்தில் பாஜக சிறப்பான வெற்றி பெறும். ஏனென்றால் பாஜகவை நாங்கள் வளர்க்கிறோமோ? இல்லையோ? திமுக நன்றாக வளர்க்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பான கேள்விக்கு, “அதிமுகவிடம் நாங்கள் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்கவில்லை” என்று பதிலளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி தற்போதும் நீடித்துவருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதுபோலவே தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் எம்.பி.சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தாங்கள் எம்.பி சீட் கேட்கவில்லை என்று கூறியுள்ளது பாஜக.
**எழில்**�,