bஉளவுத்துறையினரைக் குழப்பும் சசிகலா

Published On:

| By Balaji

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை தி.நகர் வீட்டுக்கு வந்துள்ள சசிகலா, வீட்டில் இருக்கிறாரா அல்லது வெளியூர் சென்றுவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது உளவுத்துறையினர் மத்தியில்.

பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூரிலிருந்து புறப்பட்டு 9ஆம் தேதி காலையில் சென்னைக்கு வந்த சசிகலா கடந்த ஒரு வாரமாக தி.நகர் வீட்டில் சத்தமில்லாமல் இருந்துவருகிறார். ஆர்எஸ்எஸ், பாஜக நண்பர்கள் மூலமாக அதிமுகவில் இணைவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு வகையில் அமமுக பாதையில் பயணம் செய்யலாமா என்றும் ஆலோசனைகள் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள் .

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குச் சென்று வணங்கிவிட்டு மக்களைச் சந்திக்கவும் ஒரு சில சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் திட்டமிட்டு முன்கூட்டியே ஜெயலலிதா பயன்படுத்திய டொயோடோ பரடோ காரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் சசிகலா. பிப்ரவரி 15ஆம் தேதி மதுரைக்கு விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தவர் இரண்டு நாட்களாக சைலண்டாக இருந்து வருகிறார்.

சமையலுக்கு ராஜம்மாள் வீட்டுக்கு வந்திருந்தாலும், தினந்தோறும் உணவுகள் வெளியிலிருந்து பெரிய பெரிய டிபன் கேரியர்களில் சசிகலாவின் வீட்டுக்குச் செல்கிறது, பிப்ரவரி 14ஆம் தேதி, விவேக் மூன்று டிபன் கேரியர் எடுத்துப்போனார். அதற்கு முன்னாள் ஒருவர் உயரமான டிபன் கேரியர் எடுத்துப்போனார்.

உள்ளே யார் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள், உண்மையிலேயே டிபன் கேரியர்களில் சாப்பாடுதான் போகிறதா அல்லது கவனத்தை திசை திருப்ப செய்கிறார்களா அல்லது சசிகலா வெளியூருக்குப் போய்விட்டாரா என்று அவரது வீட்டைச் சுற்றி கண்காணிப்பு வளையம் அமைத்துள்ளார்கள் உளவுத்துறையினர்.

உளவுத்துறை அதிகாரிகளிடம் உங்களை மீறி சசிகலா வெளியில் போகமுடியுமா என்று கேட்டோம்,

“அப்போது சுப்பிரமணி சுவாமியை கைது செய்வதற்குச் சென்னை வீட்டைக் கண்காணித்திருந்தோம். விமானம் நிலையத்திலும் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது மத்திய, மாநில, மாநகர உளவுத்துறையினர் கண்களில் படாமல் வீட்டைவிட்டு வெளியேறி ரயில் மூலமாக டெல்லி சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். என்ன வேணும்னாலும் நடக்கலாம் அல்லவா?” என்றார்.

மூன்று நாட்களுக்கு முன்பு புதுச்சேரி பதிவு எண் கொண்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரும், கர்நாடகப் பதிவு எண் காரும் மூவ்மென்டில் இருந்தன. தற்போது சசிகலா வீட்டிலிருக்கிறாரா, இல்லையா என்று டென்ஷனில் இருக்கிறார்களாம் உளவுத்துறையினர்.

நாம் விசாரித்ததில், சசிகலா வீட்டில்தான் இருக்கிறார். விவேக், வெங்கடேஷ் போன்றவர்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் சமுதாய சம்பிரதாயப்படி வெளியூருக்குப் போனவர்கள் நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்தால் உறவுக்காரர்கள் விருந்து வைப்பார்கள். அப்படிதான் நெருக்கமானவர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்று சசிகலாவுக்குப் பிடித்த மாதிரி சமைத்து எடுத்துவந்து கொடுத்துட்டு போகிறார்கள் என்றார் சசிகலாவின் உறவினர்களில் ஒருவர்.

**-வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share