ஜெயக்குமாருக்கு ஜாமீன் மறுப்பு: புழல் சிறைக்கு மாற்றம்!

politics

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் மறுத்து சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக பிரமுகர் நரேஷை கள்ள ஓட்டுப் போட வந்ததாக, அரை நிர்வாணமாக்கி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பிப்ரவரி 21 தேதி இரவு ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் இன்று அரசு உத்தரவை மீறி சாலை போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது தொற்று நோய்த் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் 15ஆவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் இன்று விடுமுறை என்பதால், 16ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் வேறொரு பொறுப்பு பணி இருப்பதாக வழக்கை விசாரிக்க அவர் மறுத்தார்.

இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழக அரசின் முன்னாள் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், செல்வம், இன்பதுரை ஆகியோர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் நீதிபதி தவுலத்தம்மாளிடம், 16ஆவது நீதிமன்ற குற்றவியல் நடுவர் தயாளனே விசாரிக்க கோரி அனுமதி கேட்டனர்.

அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவியல் நடுவர் தயாளன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயக்குமார் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கில் அவருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலாவது வழக்கில், பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, இணைப்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை போலீசார் வேண்டுமென்று கொலை முயற்சி(307) வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறையில் முதல் வகுப்பில் அடைக்காமல் சாதாரண வகுப்பில் அடைந்துள்ளனர். ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியவைதான். புகார்தாரரை மனுதாரர் ஜெயக்குமார் தொடகூட இல்லை” என்று வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில், சட்டம் படித்த ஒரு முன்னாள் அமைச்சர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பார்கள். அந்த வகையில் அங்குச் சம்பவம் நடந்தது. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், ஜெயக்குமார் பாதிக்கப்பட்டவரை ஆயிரம் பேர் முன்பு மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது கொலை முயற்சி ஆகும். எனவே இந்த வழக்கை 307 ஆவது பிரிவில் மாற்றி உள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கும் அவர் மீது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் மிரட்டும் வீடியோ பதிவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இன்றைய விசாரணையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து அவர், திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *