அதிமுகவை அரியணையில் அமர செய்வோம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் சபதம்!

politics

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் என அனைத்திலும் திமுகதான் முன்னிலை வகித்தது. அதிமுகவின் பலமிக்கதாக கருதப்படும் இடங்களிலும் கூட திமுகவே வென்றுள்ளது. எதிர்பார்த்த அளவு அதிமுகவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை.

எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் – குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.

இதைப்போலவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் கோட்டைகளாக விளங்கும் தொகுதியான உடுமலை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் , கோவை ஆகிய பல பகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் அதிமுக 11.94 சதவிகித உறுப்பினர்களும், நகராட்சிகளில் அதிமுக 16.60 சதவிகித உறுப்பினர்களும், பேரூராட்சிகளில் 15.82 சதவிகித உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இன்று(பிப்ரவரி 23) வெளியிட்டிருக்கும் கடிதத்தில்,” வெற்றி தோல்விகளைக் கண்டு துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு மக்களுக்கு பணியாற்றுவோம் என்றும் தமிழக அரியணையில் அதிமுகவை அமரச் செய்வோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் “தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும்.

அதனால், அதிமுக கழக உடன்பிறப்புகள் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும்” என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *