ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையை ஒட்டி நடிகர் சூர்யாவுக்கும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி எம்பிக்கும் இடையே கடிதத்தில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த நிலையில் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த 14 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் ஓடிய தியேட்டரில் முற்றுகையிட்டு அந்த படத்தை பாதியில் நிறுத்தினர். மேலும் ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரிக்கும் காட்சி அமைத்ததற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறையிடம் புகாரும் அளித்தனர்.
அப்போது பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த சித்தமல்லி பழனிசாமி, ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு கொடுப்போம்”என்று அறிவித்தார். மட்டுமல்லாமல் “மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்றும் கூறினார்.
இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இன்று (நவம்பர் 17) ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு பிரிவுகளுக்கு இடையே மோதலை தூண்டுதல், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுதல், பொது அமைதிக்கு எதிராக கருத்து வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்தமல்லி பழனிச்சாமி மீது சென்னை காவல் ஆணையரகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இதேநேரம், “சூர்யா மீது தமிழகமெங்கும் கொடுத்த புகார் மீது இதுவரை காவல்துறை நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், ஒட்டுமொத்த வன்னியர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சிண்டுமுடிந்து விட்ட
அநீதியை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு வழக்கா?” என்று பாமகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
**வேந்தன்**
�,”