போலி பத்திரம் எழுதும் எழுத்தர்கள் : எச்சரிக்கும் அமைச்சர்!

Published On:

| By Balaji

சார்பதிவு அலுவலகங்களில் தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் இன்று(ஜூலை 27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு முதன்மை செயலாளர் ஜோதி நிர்மலா, பத்திரப்பதிவு தலைவர் சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “பத்திரப்பதிவு முறையாக நடந்துள்ளதா? எந்தெந்த இடங்களில் தவறான பதிவுகள் நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம். கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடந்தது என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். சார்பதிவு அலுவலகங்களில் பத்திரங்களை எழுதி பதிவு செய்யக் கூடிய பத்திர ஆவண எழுத்தர்கள் தவறுகள் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

இரண்டு மாத காலத்தில் படிப்படியாக பத்திரப் பதிவுத்துறை சீர் செய்யப்பட்டு வருகிறது. நகர்புறம், கிராமப்புறம் எங்கே இருந்தாலும் மக்களுக்கு எளிய வகையில் சேவையை வழங்க அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தவறான போலி பத்திரப்பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு சேவை மையத்திற்கு வந்த புகார்களை 1 மணி நேரத்திற்குள், அதன் உண்மைத்தன்மை அறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.இதுவரை 5 ஆயிரம் புகார்களில் 2500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தினமும் 100-150 புகார்கள் வருகின்றன.

பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்கும் கட்டணம் வேறுபடும். அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் (guide line value) அடிப்படையிலேயே பத்திரப் பதிவு நடைபெறுகிறது.

கடந்த காலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் பத்திரப்பதிவை அதிகப்படுத்துவதற்கும், வருமானத்தை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மிக விரைவில் ஒன்றிய அரசு நிலுவைத்தொகையை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

நாளை நடைபெறவுள்ள அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,” கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை 10% கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லாததையும் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி வருகிறது. அரசை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற அதிமுகவிற்கு போராட்டம் குறித்து பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share