குண்டுகட்டாக வேலுமணி கைது: ஓபிஎஸ் ஈபிஎஸ் கண்டனம்!

politics

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்காக வந்தவர்கள் அந்தந்த பகுதிகளிலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியேற வேண்டும். ஆனால் கரூர் மற்றும் சென்னையிலிருந்து கோவை வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை 4 மணி நேரம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததைத் தொடர்ந்து துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிமுகவினரின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்தும் தர்ணா போராட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் தரையில் படுத்துக் கொண்டு கைதாக மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

இந்த போராட்டத்துக்கு நடுவே வேலுமணி, அங்கிருந்தவர்களுக்காக தனது உதவியாளர் மூலம் சாப்பாடு ஏற்பாடு செய்தார். அன்னபூர்ணா ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு உணவருந்த முடியவில்லை. ராம்நகர் பகுதியில் உள்ள மண்டபத்துக்கு கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அந்த மண்டபத்துக்கு சாப்பாடு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அனைவரும் உணவருந்தினர்.

இந்தச்சூழலில் வேலுமணி உட்பட அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவையில் கடந்த 4 நாட்களாகக் குண்டர்கள் திரிந்ததைக் கண்டு அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தும் பலனில்லை. குண்டர்களை வெளியேற்றாமல் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

நாளை நடைபெறும் தேர்தல் அமைதியாக ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். கோவையில் உள்ள குண்டர்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் மின் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் அங்குத் தங்கி வன்முறையை உருவாக்க இருக்கிறார்கள். இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலுமணி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோவையில் 100 வார்டுகளில் ஹாட்பாக்ஸை காவல்துறையினர் துணையோடு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. கோவையில் அதிமுகவின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இதுபோன்ற செயலில் முதல்வர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

அதுபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “திமுகவினரால் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தாமல், மெத்தனப் போக்கில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். திமுகவினருக்கு உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *