பூசாரிகள், அர்ச்சகர்களும் பொங்கல்முதல் சீருடையில்..!

politics

தமிழ்நாட்டு அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் முதலிய பணியாளர்களுக்கு தனித்தனியான சீருடை வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் முதல் அனைத்து கோயில் பணியாளர்களும் புதிய சீருடையில் பணியாற்றத் தொடங்குவார்கள்.

மாநிலத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36,684 திருக்கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சுமார் 52,803 பணியாளர்கள் பணியாற்றிவருகிறார்கள்.

இந்தக் கோயில்களில் பத்தாயிரக்கணக்கான அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். ஏராளமான பக்தர்கள் வருகைபுரியும் கோயில்களில் கூடுதலான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அரசுத் துறை ஊழியர்களைத் தவிர, தெய்வீக ஈடுபாடுள்ளவர்களும் மற்றவர்களும் கோயில்சார்ந்த பணிகளைச் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், அறநிலையத் துறை ஊழியர்களை சரியாக அடையாளம்கண்டு பக்தர்கள் நிறைகுறைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத நிலை நிலவுகிறது.

இத்துடன் ஒவ்வொரு துறையிலும் உள்ளதைப் போல, கோயில் பணியாளர்களுக்கும் தனி அடையாளம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால விருப்பம்.

பேருந்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், மருத்துவத் துறையினர், அஞ்சல் துறையினர், காவல்துறையினர் ஆகியோரைப் போல, தங்களுக்கும் குறிப்பிட்ட நிறத்தில், வடிவில் சீருடையாக அரசு அறிவிக்கவேண்டும் என்பதும் அவர்களின் உள்ளக் கிடக்கை.

இந்த நிலையில், வரும் பொங்கல் முதல் கோயில் பணியாளர்களும் சீருடையில் பணியாற்ற வகைசெய்யப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் புத்தாடைகளையும் புதிய சீருடைகளையும் வழங்கினார்.

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளும் மற்ற பிரிவு கோயில்பணியாளர்களும் அவரிடம் சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர்.

கோயில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம்காணும் வகையில் சீருடை இருக்கும் என்று அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

அர்ச்சகர் / பட்டாச்சாரியார் / பூசாரிகள் ஆகியோருக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும்,

பெண் பூசாரிகள், பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும்,

ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற முழுக்கால் சட்டையும், சந்தன நிற மேற்சட்டைத் துணியும் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு இரண்டு சீருடைகள் வீதம் அடையாளமாக 12 பேருக்கு முதலமைச்சரால் புத்தாடைகளும், சீருடைகளும் இன்று வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய – அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, அறநிலையங்கள் துறைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.

**-முருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *