tகரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

politics

சென்னையைக் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக மிரட்டி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது நவம்பர் 10ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அன்றைய தினம் இரவு அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

நேற்று காலை சென்னைக்குத் தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சென்னையை நோக்கி நகர்ந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 30 கிலோமீட்டர் தொலைவிலிருந்தபடி சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இது கரையை கடக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்று அவர் கூறியிருந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை பலத்த சூறைக்காற்று வீசியது.

புயல் கரையைக் கடந்தது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்குச் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை வழக்கமாக 20 சென்டிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 54 சதவிகிதம் அதிகமாகும்.

சென்னையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 42 சென்டி மீட்டர் மழை பெய்யும். இந்த ஆண்டு 74 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 77 சதவிகிதம் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாகச் சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் மாலையிலிருந்து ஏறத்தாழ 30 மணி நேரம் சென்னையில் மழை பெய்தது. இதனால் மாநகர் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநர் புகுந்ததால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது தவிர நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

**கடந்த காலங்களில் நவம்பர் மாதத்தில் பெய்த மழை அளவு**

1918 ஆம் ஆண்டு 108 செ.மீ., மழையும், 1985 ஆம் ஆண்டு 110 செ.மீ., மழையும் 2005ஆம் ஆண்டு 104செ.மீ., மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி**

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவம்பர் 13) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக் கூடும். இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *