வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று மார்ச் 20 ஆம் தேதி அறிவாலயத்தில் காலை 10 மணி அளவில் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்ட பிறகு காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இதுகுறித்து சேலம் திமுகவினரிடம் பேசினோம்.
“கள்ளக்குறிச்சி மக்களவைக்கு உட்பட்ட ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி தொகுதிகளுக்கு மாசெ வாக இருப்பவர் சேலம் கிழக்கு மாசெ வான சிவலிங்கம். இவர் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பரிசீலனை பட்டியலில் முன்னிலையில் இருந்தார். நேற்று இரவு வரை இவர்தான் வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பெயர் அகற்றப்பட்டு தியாகதுருவம் பேரூர் கழக செயலாளர் மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துக் கொண்டிருந்தபோது… கலைஞர் அரங்கத்தில்தான் இருந்தார் சிவலிங்கம். கள்ளக்குறிச்சி தொகுதிக்கு மலையரசன் என்று ஸ்டாலின் அறிவித்ததும் ஏமாற்றம் அடைந்த சிவலிங்கம், அரங்கத்தில் இருந்து வெளியேறினார். போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
அதன் பிறகு ‘சூம்’ மூலமாக நடந்த மாசெக்கள் கூட்டத்திலும் சிவலிங்கம் கலந்துகொள்ளவில்லை. சிவலிங்கம் சிவலிங்கம் சிவலிங்கம் என மூன்று முறை திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்தும் அவர் இணைப்பில் வரவில்லை” என்கிறார்கள்.
தற்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தேனி தொகுதியில் போட்டியா? -டிடிவி தினகரன் பதில்!
Rain Update: நாலு நாளைக்கு மழை இருக்கு… நச்சுன்னு வெளியான அப்டேட்!