“பெங்களூரு கஃபே வெடிகுண்டு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்” என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 22) உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 19-ஆம் தேதி கர்நாடகாவை சேர்ந்த பாஜக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்” என்று பேசியது சர்சையை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். கண்டனங்கள் குவிந்த நிலையில், தனது பேச்சுக்கு ஷோபா மன்னிப்பு கேட்டார்.
இதனையடுத்து மதுரை, பெங்களூரு காட்டன்பெட் காவல் நிலையங்களில் ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார்.
இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், “தேர்தல் நேரமாக இருப்பதால், தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் போலீசார் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்” என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது “ஒரு நாகரீக சமுதாயத்தை உருவாக்க அனைத்து கட்சி தலைவர்களும் நிதானம் காட்ட வேண்டும். பொது இடங்களில் பேசும்போது ஷோபா எச்சரிக்கையாக பேச வேண்டும்” என்று அறிவுறுத்தி அவர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!
CSK vs RCB: பரபரப்புக்கு பஞ்சமே இல்ல… சமூக வலைதளங்களில் ‘பறக்கும்’ மீம்ஸ்கள்!