அதானி முறைகேடு, ஆருத்ரா ஊழல் வழக்குகளை திசை திருப்புவதற்காகவே அண்ணாமலை திமுகவினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 14) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஒரு ஊழல் குற்றாச்சாட்டையாவது சொல்லியிருக்கிறாரா? அவர் சொன்ன பேட்டியை வைத்து பார்க்கும் போது 1972-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மீது எம்ஜிஆர் கவர்னரிடம் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்களை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என்று கலைஞர் கூறினார்.
அதுபோன்று அண்ணாமலை கொடுத்த பேட்டியை பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது. அவருடையை அறியாமையை பார்த்து எப்படி இவர் ஐபிஎஸ் பாஸ் செய்தார் என்ற சந்தேகம் வருகிறது.
அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிற 17 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடும் போது தங்களுடைய சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவருடைய சொத்து விவரங்களை மீறி சொத்து வைத்திருந்தால் சாதாரண குடிமகன் கூட அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம்.
அண்ணாமலை எப்பொழுதும் உண்மையை சொல்லி பழக்கம் இல்லை. எங்களுடைய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த லஞ்ச புகாரையாவது அவரால் கொடுக்க தைரியம் இருக்கிறதா? வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மோடி கையில் தானே இருக்கிறது? முடிந்தால் வழக்குப்பதிவு செய்யட்டும்.
யார் யார் மீது அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறாரோ அவர்கள் அனைவரும் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.
அதனால் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவிற்கு சுற்றுப்பயணம் செய்வதை விட நீதிமன்றங்களுக்கு அதிகமாக சுற்றுப்பயணம் செய்வார்.
அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில்லை காட்டுகிறேன் என்று கூறி துண்டு சீட்டை காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார்.
திமுக இது போன்ற பல குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளது. எம்ஜிஆரால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.
எம்ஜிஆரை விட ஜெயலலிதாவை விட இந்த அண்ணாமலை அறிவுலக மேதை இல்லை.
திமுகவிற்கு சொந்தமான சொத்து ரூ.1,408 கோடி உள்ளது என்று கூறியிருக்கிறார். இதற்கான ஆவணங்களை இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும்.
திமுகவிற்கு சொந்தமான பள்ளிகளில் இருந்து ரூ. 3,418 கோடி வருவாய் வருகிறது என்று கூறுகிறார். அந்த பள்ளிகள் எங்கெங்கு எந்தெந்த ஊர்களில் உள்ளது என்ற பட்டியலை இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவிற்கு சொந்தமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்து ரூ.34,184 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஆவணங்களையும் அவர் கொடுக்க வேண்டும்.
அதானி ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்கள். இந்த விவகாரம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
ஆருத்ராவில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஏழை, எளிய மக்கள் பாஜக அலுவலகம் சென்று போராட்டம் செய்தனர். ஆருத்ரா ஊழல் ரூ.2000 ஆயிரம் கோடியில் ரூ.84 கோடி ரூபாய் அண்ணாமலை நேரடியாக பெற்றுள்ளார்.
ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை நிச்சயமாக சிறைக்கு செல்வார். இதனை அவருடைய கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் இவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். திமுகவை பொறுத்தவரை எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை.
அண்ணாமலை போன்றவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்தால் தான் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றி பெற வசதியாக இருக்கும்.
எடப்பாடி, வேலுமணி போல நாங்கள் அண்ணாமலைக்கு பயப்பட மாட்டோம். அதிமுகவினர் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறி அவர்களிடம் அண்ணாமலை டீல் பேசிக்கொண்டிருக்கிறார்”என்று தெரிவித்தார்.
செல்வம்
அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!
ஊழல் பட்டியல்: “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி