பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக – அமமுக இடையே தொகுதி ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக-விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக போட்டியிடவுள்ள அந்த இரண்டு தொகுதிகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “அமமுகவிற்கு நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்தவுடன் அமமுவுக்கான தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அமமுக கட்சி ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிடத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் திராவிட இயக்கங்களை ஒழிப்பதாக கூறியது திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிகளைத் தான். எங்கள் கட்சிகளின் பெயரில் திராவிடம் இல்லை. நாங்கள் ‘அம்மா’ என்ற மாபெரும் சக்தியின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அம்மா என்பவர் திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் பிறந்த அனைவரும் திராவிடர்கள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான் பிறந்த மண் தஞ்சை. ஆனால், அம்மா என்னை முதல் முதலாக போட்டியிட சொன்ன இடம் தான் தேனி.
அரசியலில் நான் பிறந்த மண் தேனி மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி. அங்குள்ள ஒவ்வொரு இடத்தையும் நான் 10 ஆண்டுகளாக சுற்றி வந்துள்ளேன். அந்த பகுதி மக்களுடன் எனக்கு பாசப்பிணைப்பு அதிகம். அங்கு நான் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்த முறை பார்க்கலாம்.
அமமுக கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் தான் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடக் கோரியுள்ளனர்.
அந்த கோரிக்கையை நாங்கள் பாஜக கூட்டணியிடம் கொடுத்தோம். முதலில், பாஜக கூட்டணியில் எங்களுக்கு அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டன. நாங்கள் தான், அனைத்து கட்சியினரையும் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்றோம்.
டெல்டா பகுதிகளில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களுக்குச் செல்வாக்கு அதிகம் உள்ளது. அந்த தொகுதிகளில் எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
அத்தோடு, மற்ற தொகுதிகளிலும் எங்களுக்குக் கணிசமான வாக்கு எண்ணிக்கை இருக்கிறது. அதன் காரணமாக 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு அமமுகவினர் உதவியாக இருப்பார்கள்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகத் தான் இருக்கும். மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வரப்போவது உறுதி.
ஏனெனில், அவர் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் அதிகம். ஊழல் அற்ற நிர்வாகம் செய்தவர் மற்றும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி.
இன்னும் வருங்காலங்களில் இந்தியாவை வல்லரசு நாடாக பிரதமர் மோடி உயர்த்துவார். மோடி மீண்டும் பிரதமராவதைத் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதுணையாக இருப்போம். திமுக கூட்டணியில் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டால், அதனை நாங்கள் முறியடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்!
Ilaiyaraaja Biopic: அவரோட பயோபிக்லயும் நடிக்கணும்… ஓபனாக பேசிய தனுஷ்