வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கம் நூற்றாண்டு விழாவையொட்டி கேரள பயணம் மேற்கொண்ட காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அங்கே பெரியார் நினைவகத்தை புதுப்பித்து, நூலகம் உள்ளிட்ட கட்டுமானங்களை அமைத்து நாளை திறந்து வைக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இது குறித்து மின்னம்பலத்தில் விரிவான செய்தி வெளிவந்துள்ளது.
கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாரான ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம்… கடந்த டிசம்பர் 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பற்றி அதிருப்தியோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
‘சட்டமன்றம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டிலும் மிக குறைந்த நாட்கள் அளவிலேயே செயல்பட்டுள்ளது. அதனால் பல மக்கள் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. எனவே வரும் கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக 376 ஆவது வாக்குறுதியாக வெளியிட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சியிலும் சட்டமன்றம் கூடும் நாட்கள் மிக சொற்பமான அளவிலேயே இருக்கின்றன என திமுக எம்எல்ஏக்களே வருத்தப்படுகிறார்கள்.
சட்டமன்றம் சீரான இடைவெளிகளில் கூடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் திட்டங்கள் விவாதிக்கப்படும்போது தான் அதிகாரிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள். ஆனால் இப்போது சட்டமன்றம் கூடும் நாட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதிகாரிகள் மிக ஆதிக்கமான போக்கிலே இருக்கிறார்கள் என்பது திமுக எம்எல்ஏக்களின் குமுறலாக இருக்கிறது.
இந்த குமுறல் ஒரு பக்கம் என்றால், இரண்டு நாட்கள் கூடிய சட்டமன்றத்திலேயே பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘9 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் திட்டம் சம்பந்தமாக கடுமையான வாக்குவாதம் நடத்தினார். அதுதான் அன்றைய ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வந்தது. மற்ற விவாதங்களில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வரை திருப்தி படுத்தவில்லை.
அமைச்சர் சிவசங்கர் பாமக உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கும் போது ஆவேசமாக அதே நேரம் ஆணித்தனமான வாதங்களை வைத்தார். ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் தேதி அறிவிப்பிற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு அடித்தோம் பிடித்தோம் என வெளியானது. அது உங்கள் தவறு என்று இந்த அரசின் தவறல்ல. அதேபோல சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் உங்களுடைய கூட்டணி கட்சியான ஒன்றிய அரசிடம் ஏன் நீங்கள் எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை?’ என்ற ரீதியில் சிவசங்கர் அழுத்தம் திருத்தமாக பேசினார். இது முதலமைச்சர் ஸ்டாலினை கவர்ந்தது என்கிறார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்களே.
சிவசங்கர், உள்ளிட்ட சில அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்களின் சட்டமன்ற பர்ஃபார்மன்ஸில் முதல்வருக்கு திருப்தி இல்லை என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் இருந்து கிடைக்கிற லேட்டஸ்ட் அப்டேட். முதல்வர் கேரளா பயணம் முடித்து திரும்பிய பிறகு அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப் போகிறார் என்றும் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்” என்கிற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆறு நாட்களில் ஆயிரம் கோடி : பிரபாஸ், ஷாரூக் பட வசூலை மிஞ்சிய புஷ்பா 2
ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!