|

இந்தியா கூட்டணி: தலைமையேற்கத் தகுதியானவர் யார்?

முனைவர் து. ரவிக்குமார்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக ஆக்க வேண்டும் என்ற அக்கட்சியினரின் கருத்து தற்போது தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரால் வழிமொழியப்பட்டுள்ளது.

தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக உள்ளார். 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பு ஜனவரி 2024 இல் இணையவழியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

அப்போது இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த முடிவை மம்தா பானர்ஜி ஏற்காததால் நிதிஷ்குமார் தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டார். அதன் பின்னர் வேறு எவரும் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படவில்லை.

பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைந்த முறையில் வழிநடத்துவதில் காங்கிரஸ் கட்சி சுணக்கம் காட்டுகிறதென்பது உண்மைதான். நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தன்னிச்சையாக அது தீர்மானிக்கிறது. 17 ஆவது மக்களவையில் இருந்த அளவுக்குக்கூட இப்போது கூட்டணிக் கட்சிகளிடம் காங்கிரஸ் கலந்தாலோசிப்பதில்லை.

அவையில் ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதுகூட மற்ற கட்சிகளுக்குத் தெரிவதில்லை. அதனால் காங்கிரஸ் எது செய்தாலும் அதை ஆதரிக்க வேண்டிய நிலைக்குக் கூட்டணிக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. இந்தக் குறைபாடுகள் களையப்பட வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே புரிந்துணர்வும் தோழமையும் மேம்பட வேண்டும். அதை வலியுறுத்துவதே இந்தியா கூட்டணி கட்சிகளின் உடனடிக் கடமை.

இந்தியா கூட்டணியை வழிநடத்துவதற்கு மம்தா பானர்ஜியின் பெயரை முன்மொழிபவர்கள் அந்தப் பொறுப்பு கார்கே வகிக்கும் தலைவர் பொறுப்பா அல்லது நிதிஷ்குமார் மறுத்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. எனினும் அது ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும்போது பல அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ எம் , சிபிஐ எம்.எல் ஆகியவை உள்ளன. ஏனையவை பிராந்திய, மாநிலக் கட்சிகளாகும் . இவற்றுக்கிடையே சமூக, பொருளாதார, அரசியல் நிலைபாடுகளில் ஒற்றுமையும் உண்டு முரண்களும் உண்டு. முரண்களைக் குறைத்து ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் அணுகுமுறை ஒருங்கிணைப்பாளருக்கு இருக்க வேண்டும். அது தனி நபரின் வாக்குறுதியாக அல்லாமல் அந்தப் பொறுப்பை வகிக்கும் கட்சியின் அரசியல் நிலைப்பாடாக ஆக வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ( என் டி ஏ) நடைமுறைப்படுத்த விழையும் மதவாத, தாராளவாத- சமூக, பொருளாதார, அரசியல் திட்டங்களை எதிர்த்து முறியடிப்பதில் இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே உறுதியும் ஒற்றுமையும் அவசியம். அதை சாதிக்கும் திறன் கொண்டவராக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் இருக்க வேண்டும்.

18 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்துவிட்டன. அது இந்தியா கூட்டணிக் கட்சிகளின் விழிப்பு நிலையைக் குறைத்துவிட்டது. ஒரு மெத்தனப் போக்கு அவற்றுக்கு வந்துவிட்டது. ஆனால், பாஜகவோ தாம் நடத்துவது சிறுபான்மை ஆட்சி என்னும் உணர்வே இல்லாமல் தமது திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. இதனால் 17 ஆவது மக்களவைக் காலத்தில் ( 2019-24) இருந்ததைவிட ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

2019-24 இல் அவ்வப்போதாவது நீதித்துறை பாஜக அரசின் மூர்க்கத்தைத் தணிக்க சிறு சிறு கடிவாளங்களைப் போட்டது. இப்போது அவர்களோடு நீதித்துறையும் சேர்ந்துகொண்டுவிட்டதுபோல் தெரிகிறது. சில நேரங்களில் நீதிபதிகளே ஆள்வோருக்குக் களம் அமைத்தும் கொடுக்கிறார்கள். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷேகர் குமார் யாதவ் அண்மையில் பேசிய வெறுப்புப் பேச்சு இதற்கொரு சான்று. இப்படியான நேரங்களில் இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதானி குழுமத்தைச் சேர்ந்தவர்கள்மீது லஞ்சம் தர முயன்றார்கள் என அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்திருக்கும் வழக்கை நாடு தழுவிய பிரச்சனையாக இந்தியா கூட்டணி இன்னும் மாற்றவில்லை.

அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வாக்குப் பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் பொது மக்களிடம் அதிகரிக்கச் செய்துள்ளன. வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தக்கூடாது என்பதை வெகுமக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு இது உகந்த தருணமாகும். ஆனால், இந்த வாய்ப்பையும் இந்தியா கூட்டணி பயன்படுத்தவில்லை.

16 ஆவது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு அளவைத் தீர்மானிப்பதிலும் ஒருங்கிணைந்த முன்னெடுப்பு இல்லை. நிதிக் கூட்டாட்சி ( fiscal federalism) என்பது பாஜக ஆட்சியில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநில அரசுகளுக்கு ஓரவஞ்சனை காட்டப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. அதனால் மக்கள் நலத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 2011 சென்சஸ் அடிப்படையில் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. அதனால் கோடிக் கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்தும் இந்தியா கூட்டணி உருப்படியாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில்கூட கூட்டணிக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.

17 ஆவது மக்களவையில் இருந்த பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக அரசு இயற்றிய மக்கள் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்கு இந்தியா கூட்டணி முனைப்பு காட்டவில்லை. அதனால் பாஜக அரசு இப்போதும் தொடர்ந்து அத்தகைய சட்டங்களைக் கொண்டுவரப் பார்க்கிறது.

மேலே சொன்ன குறைபாடுகளைக் களைந்து மாநில உரிமைகளைக் காப்பதற்கும்; சமூக நீதியை நிலை நாட்டுவதற்கும்; மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கும் நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்- என மூன்று களங்களிலும் இடையறாத போராட்டங்களை நடத்துவதற்கும் இந்தியா கூட்டணி அணியமாக வேண்டும். அதற்கானத் தலைமையைக் கொடுக்கும் தகுதி வாய்ந்தவரை அடையாளம் காண்பதே இன்றைய தேவையாகும். அத்தகையவர் பாஜகவின் பிளவுவாத பாசிச அரசியலை சமரசமில்லாமல் எதிர்ப்பவராக இருப்பதோடு, கூட்டணியை அரவணைத்து முன்னெடுத்துச் செல்பவராகவும் இருப்பது அவசியமாகும்.

அத்தகைய தகுதி கொண்ட தலைவர்களென இந்தியா கூட்டணியில் இருவரைத்தான் சொல்ல முடியும்- ஒருவர் ராகுல் காந்தி, இன்னொருவர் மு.க.ஸ்டாலின்.

மம்தா பானர்ஜியின் அதிரடி அரசியல் அணுகுமுறையை மேம்போக்காகப் பார்த்தால் ஈர்ப்பதாகத் தோன்றலாம். ஆனால் ஒரு பெரிய கூட்டணியை வழிநடத்துவதற்கு அது உதவாது, பக்குவமான அணுகுமுறையே அதற்குத் தேவை. கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை வழிநடத்தி மூன்று தேர்தல்களில் மகத்தான தொடர் வெற்றியைப் பெற்றிருப்பவர் மு.க.ஸ்டாலின். வாய்ப்பு அளிக்கப்பட்டால் சந்திரபாபு நாயுடுவை விட சிறப்பான ஒருங்கிணைப்பாளராக அவர் திகழ்வார்.

பாஜகவுக்கு எதிரான அரசியல் என்பது பாஜகவின் அதிகாரத்துவத்தைத் தாமும் பின்பற்றுவதாக இருக்க முடியாது. பாஜகவின் வகுப்புவாத அரசியலுக்கும், எல்லா அதிகாரங்களையும் மையத்தில் குவிக்கும் போக்குக்கும், பன்மைத்துவத்தை அழிக்கும் முயற்சிகளுக்கும் எதிரான செயல் திட்டங்களை முன்வைப்பதே அந்த அரசியல். அந்த அரசியலை உறுதியோடு தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்கள் ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் ஆவர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்பதையும் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும் என்பதையும் ராகுல் காந்தி இடைவிடாது வலியுறுத்தி வருகிறார். அவை திமுகவின் கொள்கைகளுமாகும். ஆனால் சமூக நீதியின் அடித்தளங்களான இவற்றை செல்வி மம்தா ஏற்பதில்லை. கூட்டாட்சி, மாநில உரிமைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்து ராகுல் காந்திக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கும் தெளிவான பார்வை செல்வி மம்தாவுக்குக் கிடையாது.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை தத்தமது மாநிலங்களில் காங்கிரசோடு இருக்கும் முரண்பாடுகளின் காரணமாக இந்தியா கூட்டணிக்கு செல்வி மம்தாவைத் ஒருங்கிணைப்பாளர் ஆக்கலாம் என்று சொல்கிறார்கள். இது ஒரு குறுகிய பார்வை என இனி உதாசீனம் செய்துவிட முடியாது.

இந்தியா கூட்டணியின் தலைமை தொடர்பான சர்ச்சை முன்னெழுந்து வந்திருக்கும் நிலையில் இதை மூடி மறைத்துத் தள்ளிப் போடுவது காங்கிரசுக்கு அழகல்ல. இந்த சர்ச்சை எழுவதற்குக் காரணமான குறைபாடுகளை நிவர்த்தி செய்து முழுமையான வேகத்துடன் இந்தியா கூட்டணியை வழிநடத்த பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரஸ் முன்வரவேண்டும். அல்லது இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை காங்கிரஸ் முன்மொழிய வேண்டும். அதுவே இந்த சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வாக இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

Are secularism and socialism parts of the Constitution? Supreme Court Judgement - Article in Tamil by Dr Ravikumar MP

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு!

பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் தமிழக போக்குவரத்து கழகம் : அதிர்ச்சி அளிக்கும் சி.ஏ.ஜி அறிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts