பிள்ளை பெத்துக்க மாட்டேங்குறாங்க… மாற்றி யோசித்த ஜப்பான் அரசு
உலகில் 100 வயதிற்கு மேல் அதிகமாக வாழும் மக்கள் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது ஜப்பான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர், 65 வயதை கடந்தவர்கள் என்பதும் முக்கியமான தகவல். இதனால், வருங்காலத்தில் முதியவர்கள் வசிக்கும் நாடாக ஜப்பான் மாறி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு முற்றிலும் குறைந்து போய் விட்டது.
வேலை வேலை என்று மக்கள் போய் கொண்டிருப்பதால், குழந்தைகள் பெற்று வளர்க்க ஜப்பான் தம்பதிகள் விரும்புவதும் இல்லை. ஜப்பானில் 72 சதவிகித ஆண்களும் 55 சதவிகித பெண்களும் வேலை பார்க்கிறார்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது கூட குறைந்து வருகிறது. இதனால், கருவுருதலும் எளிதாக நடைபெறுவதில்லை.
கடந்த ஆண்டில் 7 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகளே பிறந்துள்ளன. இதையடுத்து, வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க டோக்கியோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்ப்பது ஊழியர்களின் திறமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்குமாம். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் வளம் பெறுவார்களாம். மன உளைச்சல் குறைந்து விடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தம்பதிகள் குடும்ப பொறுப்பில் அதிகளவில் ஈடுபடுமளவு மனம் உற்சாகமடையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூரிலும் 4 நாள் வேலையை அமல்படுத்த தொழிலாளர்கள் நல வாரியம் தரப்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு வெற்றி பெற்றாலும் , பெரும்பாலான நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள்பணியை அமல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. இங்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி அமலில் உள்ளது. 44 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அது, 36 மணி நேரமாக குறைக்கப்பட்டாலும், அதே ஊதியத்தையை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு!
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!