|

ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வைக்கத்தில், தந்தை பெரியாரின் நினைவகம்,  நூலகம் ஆகியவற்றை டிசம்பர் 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இதற்காக டிசம்பர் 11 ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் கேரளா புறப்பட்டுச் சென்றார். இவ்விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன்பே கேரளா சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வைக்கத்தில் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும், முதல்வர் ஸ்டாலினுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கேரள அதிகாரிகளோடு ஆய்வு செய்தார்.

வைக்கம் என்பது திராவிட வரலாற்றில் முக்கியமான பெயர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. அங்கிருக்கும் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்க உயர் சாதியினர் தடை விதித்திருந்தனர்.

இந்த தடையை எதிர்த்து கேரளாவில் இருக்கும் ஈழவர் தலைவர் வழக்கறிஞர் டி.கே. மாதவன் கிளர்ச்சிகளை முன்னெடுத்தார். அவரை ஒட்டி கேரள காங்கிரசின் அன்றைய தலைவர்கள் கே.பி. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோர் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக 1924  ஆம்  ஆண்டு மார்ச் 30 இல் போராட்டத்தைத் தொடங்கினர்.

கேரள காங்கிரஸ் தலைவர்கள் கணிசமானோர் கலந்துகொண்ட இந்த போராட்டம் ஒரு மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. காரணம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடித் தேடி கைது செய்து சிறையில் தள்ளியது திருவாங்கூர் சமஸ்தானம்.

அப்போதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பெரியாருக்கு, ஜார்ஜ் ஜோசப் கடிதம் எழுதி, ‘நீங்கள் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்’ என்று அழைக்கிறார்.

அதன்படியே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், 1924 ஏப்ரல் 13 ஆம் தேதி வைக்கத்தில் போராட்டத்தைத் தொடங்கினார். சுமார் இரு வருடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 1925  நவம்பர் 29 இல் வைக்கத்தில் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றி விழா நடத்திய வரைக்கும் பெரியாரின் பங்கு மகத்தானது.

இந்த கால கட்டத்தில்தான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெரியாரை, ‘வைக்கம் வீரர்’ என்று அழைத்தார். அது முதற்கொண்டு பெரியார் ’வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

வைக்கம் போராட்டத்தில் ஆறுகுட்டி சிறையில் ஒரு மாதம் அடைக்கப்பட்டார் பெரியார். சிறையில் இருந்து வெளியானதும் மீண்டும் வைக்கத்தில் போராட்டத்தைத் தொடர்ந்தார். அதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

வைக்கம் வீரர் என்று இன்றளவும் அழைக்கப்படும் தந்தை பெரியார், “என்னைப் பற்றி பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தை பற்றி சொன்னார்கள். அதை நடக்கவித்ததும் அது வெற்றியாய் முடிவு பெற காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

வைக்கம் போராட்டத்தின் உற்சாகமான நடப்புக்கும், அதன் வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று 1933 இல் கொச்சியில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் பேசினார் பெரியார்.

ஆனாலும் இன்றுவரை அவர்தான் வைக்கம் வீரர் என்று வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இந்நிலையில் வைக்கம் போராட்டத்தின்  நூற்றாண்டை ஒட்டி கடந்த 2023  மார்ச் 30 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

‘பெரியார் நினைவகம் சீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இரு தினங்களில் கேரளாவில் நடந்த வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் விதி எண் 110-இன் கீழ் அறிக்கை ஒன்றை நான் அளித்தேன். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய இருப்பதாக நான் சொல்லி இருக்கிறேன். அதற்கு  உரிய முறையான அனுமதிக் கடிதத்தை கேரள அரசுக்கு நாங்கள் விரைவில் அனுப்பி வைப்போம்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் சரியாக ஒன்றரை வருடங்களில் தந்தை பெரியாரின் நினைவகம், நூலகம் ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் பண்பாட்டை பறை சாற்றும், திராவிடத்தின் திறம் போற்றும் எந்த நினைவுச் சின்னமாக இருந்தாலும்… அதனை உருவாக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறை அமைச்சரான, ‘எதிலும் வல்லவர்’ என்று குறிப்பிட்ட  எ.வ.வேலுவிடம்தான் ஒப்படைத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் இது கேரளாவில் எழுப்பப்பட வேண்டிய நினைவுச் சின்னம். எனினும் எ.வ.வேலு கேரள அரசோடு முறைப்படி பேசி, கேரளாவில் திராவிட மாடல் அரசான தமிழக அரசின் திட்டத்தை செம்மையாக முடிப்பார் என்ற நம்பிக்கையில், இந்த நினைவகப் பொறுப்பையும் எ.வ.வேலுவிடமே ஒப்படைத்தார் ஸ்டாலின்.

இதற்காக கடந்த ஆண்டு  நவம்பர் மாதமே கேரளா சென்ற அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் நகரில் ஏற்கனவே  மார்பளவு சிலையோடு இருந்த பெரியார் நினைவகத்தை புதுப்பிப்பது பற்றி ஆய்வு செய்தார்.

தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இதை புதுப்பிப்பதோடு… வைக்கம் பகுதியில் 70 சென்ட் பரப்பில் நினைவக வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.  ஏற்கனவே அங்கே இருந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவை அகற்றப்பட்டு வைக்கத்தில் பெரியார் நினைவிடம் புத்துயிர் பெற்று ஜொலிக்கிறது.

தொடர்ந்து இந்த நினைவிடம் பற்றி கண்காணித்து வந்த அமைச்சர் எ.வ.வேலு, விழாவுக்கு இரு நாட்கள் முன்னதாகவே கேரளா சென்று விழா ஏற்பாடுகளையும் விரிவாக ஆய்வு செய்தார். கேரள அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசித்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,  “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி… பெரியார் நினைவகம், பெரியார் நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.  கேரள முதல்வர் தலைமை வகிக்கிறார். 8.14 கோடி ரூபாய் செலவில் இந்த வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இங்கே இருக்கும் நூலகம் பலருக்கும் பயன்படும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.  கேரள அரசின் தேர்வாணைய தேர்வுகள் தொடர்பான அனைத்து புத்தகங்களும் இருக்கிறது. அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வுக்குரிய அனைத்து வகை புத்தகங்களும் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இது தவிர வைக்கம் போராட்டம் சம்பந்தப்பட்ட வைக்கத்தை சுற்றியிருக்கிற அதன் தலைவர்கள், வைக்கத்தின் வரலாறு பற்றிய புத்தகங்கள் மலையாளம், ஆங்கில மொழிகளில் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் திராவிட  மாடல் ஆட்சியை பெரியார், அண்ணா, கலைஞர் வழியே தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். அதன் அடையாளமாக சமூக நீதியின் அடையாளமாக தமிழக முதல்வர் இதை கட்டியிருக்கிறார்” என்றார்,

வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வீதிகளில் இந்த நிலைமை இல்லாவிட்டாலும், இன்னமும் முக்கிய துறைகளில் முக்கிய அதிகாரங்களில் சிலரது பேராதிக்கமே சூழந்திருக்கிறது.

வைக்கத்தில் ஸ்டாலின் திறந்து வைக்கும் பெரியார் நினைவிடம், இந்தியா முழுமைக்கும் பெரியாரின் தேவையை உரத்துச் சொல்கிறது.

இந்த விழாவுக்காக  டிசம்பர் 11 ஆம் தேதி கேரளா வந்த ஸ்டாலினை கேரளாவின் பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். ‘ஸ்டாலின் வந்தல்லே…  வைக்கத்தின் சமூக நீதி வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ என்று மகிழ்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா என்னும் இரு மாநில முதல்வர்கள் வைக்கம் நூற்றாண்டு விழாவில் பேசும் பேச்சு, இந்தியா முழுமையும் பெரியாரை கவனிக்க வைக்கும்!

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts