பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் தமிழக போக்குவரத்து கழகம் : அதிர்ச்சி அளிக்கும் சி.ஏ.ஜி அறிக்கை!

Published On:

| By Minnambalam Login1

cag report transport corporations

2018 ஆண்டு ரூ. 24,718 கோடியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் 2022-இல் ரூ.48,478 கோடியாக அதிகரித்தது என்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாடு பற்றிய இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் (Comptroller and Auditor General) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2017 முதல் 2022 வரை தொடர்ந்து நஷடத்தை சந்தித்துவரும் தமிழக போக்குவரத்து கழகங்களின் நஷ்டம் 2022 இறுதியில் ரூ.48,478 கோடியாக உள்ளது.

போக்குவரத்து கழகங்களால் போதுமான வருமானத்தை ஈட்ட முடியவில்லை. கழகங்களின் மொத்த செலவில் 55 முதல் 63 சதவீதம் ஊழியர்களுக்கான சம்பளமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் ரூ.4,819 கோடி நஷ்டத்தையும், குறைந்தபட்சமாக தமிழக அரசு விரைவு பேருந்து கழகம் ரூ1,962 நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

சென்னையில் இயங்கும் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு ரூ.76.11 ஆனால் வரவு ரூ.48.61 தான்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 பேருந்துகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு பதிலாக ஏறத்தாழ 300 புதிய பேருந்துகள் தான் சேர்க்கப்படுகின்றன.

இதனால் 2017-18 காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த 22,517 பேருந்துகள் 2022 இறுதியில் 20,600 ஆக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான நீண்ட கால திட்டங்களை போக்குவரத்து கழகங்கள் வகுக்காததால் மக்கள் ஷேர் ஆட்டோ, ஆட்டோ உள்ளிட்ட மற்ற போக்குவரத்து முறைகளுக்கு மாறிவிட்டனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம் ஆகிய நான்கு கழகங்களில் பணிபுரிகிற மொத்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் 4341 பேர் பேருந்து இயக்கத்திற்கு பதிலாக மற்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பைக் டாக்ஸி இயங்கலாம், ஆனால்… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

திருவண்ணாமலை மகா தீபம்… மலையேற அனுமதி இல்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel