மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 2!

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 2!

ஜெ.ஜெயரஞ்சன்

நிதிக்குழு மாநில உரிமைகளுக்கு 42 விழுக்காடு வழங்கியிருப்பதால் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடச் சொல்லியிருப்பதன் மூலம் அடுத்த நிதிக்குழுவில் மாநில அரசுகளுக்கான நிதியை மேலும் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறதா, என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கீட்டைக் குறைக்க ஒன்றிய அரசு கையிலெடுத்திருக்கும் மற்றுமொரு தந்திரமோ என்றும் மாநில அரசுகள் அச்சம் கொண்டுள்ளன. நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் 'நியூ இந்தியா 2022' என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

நியூ இந்தியா 2022 என்ற திட்டம் பல துறைகளில் பரந்து விரிந்த திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய துறைகள் பலவும் மாநிலங்கள் வசம்தான் உள்ளதே தவிர ஒன்றிய அரசிடம் இல்லை. அவ்வாறான சூழலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசின் நிதி நிலைமை என்னவாகிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது ஏன், என்பதும் மாநில அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை ஏன் நிதிக்குழு ஆராய வேண்டும்? நியாயமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் மாநில அரசின் நிதி என்னவாகும் என்றுதான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் இத்தகைய வழிகாட்டுதலால் 'இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆகவே இந்த நிதியை ஒன்றிய அரசே வைத்துக்கொள்ளும்' என்ற முடிவை அடுத்த நிதிக்குழு எடுக்கக்கூடும் என்ற அச்சமே மாநில அரசுகளை மேலும் கவலையுறச் செய்திருக்கிறது.

ஜிஎஸ்டியை செயல்படுத்தியால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதையும் 15ஆவது நிதிக்குழுவை ஆராயச் சொல்லியிருக்கிறது ஒன்றிய அரசு. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தத் திட்டத்தால் வரி விகிதத்தில்தான் மாறுபாடு இருக்குமே தவிர ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாயில் எந்த மாற்றமும் (revunue nutrel) இருக்காது என்றுதான் கூறினார்கள். இதுபோன்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது சில மாநிலங்களுக்கு வரி வருவாயில் இழப்பும், சில மாநிலங்களுக்கு லாபமும் ஏற்படலாம். இதில் வரி வருவாய் இழந்த மாநிலங்களுக்கு அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு எவ்வளவு வரி வருவாயை அவர்கள் இழந்தார்களோ, அந்த வரி வருவாயை ஒரு சிறப்பு வரி விதித்து பிரித்தளிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. அந்தச் சிறப்பு வரி வருவாய் போதவில்லை என்றால் அதனை ஜிஎஸ்டி வழியாகத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர, அதை நிதிக்குழுவை ஆராயச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? இது மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அச்சம்.

அதேபோல, எதற்கெல்லாம் ஊக்கம் (incentivization) கொடுக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு நிதிக்குழுவிடம் கேட்டுள்ளது. ஊக்கம் கொடுப்பது என்றால், நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மாநிலத்தை மேலும் ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு நிதியை ஏற்பாடு செய்து அளிப்பதாகும். எடுத்துக்காட்டாக, 30 விழுக்காடாக இருந்த கல்வி அறிவை 85 விழுக்காடாக ஒரு மாநிலம் உயர்த்தியுள்ளது என்றால் அதை 100 விழுக்காடாக உயர்த்த ஒரு சிறப்பு நிதியை வழங்குவது நியாயமான ஒன்றாகும். இதுபோன்ற நிதிப்பகிர்வை தீர்மானிக்கும்போது எதற்கெல்லாம் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நிதிக்குழுவின் வழக்கம். அந்த வகையில் இந்த 15ஆவது நிதிகுழு எதற்கெல்லாம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வழிகாட்டியுள்ளது என்பதுதான் தென் மாநில மக்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டுதான் நிதிப்பகிர்வு பெரும்பாலும் கணக்கிடப்படுகிறது. மாநிலத்தின் வரி வருவாய்க்கான சாத்தியம் எவ்வளவு உள்ளது, அதே சமயத்தில் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டு, இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் ஒன்றிய நிதிப் பகிர்விலிருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டுதான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்பது உண்மையே. ஆனால் தென் மாநிலங்களில் இப்போது மக்கள் தொகை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு எத்தனைப் பேர் இறக்கிறார்களோ, அத்தகைய எண்ணிக்கையில் தான் பிறப்பு விகிதமும்(replacement level) இங்கு இருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் இறப்பு விகிதத்தை விடக் கூடுதலாக பிறப்பு விகிதம் இருக்கிறது. தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் வட மாநிலங்களின் மக்கள் தொகை மேலும் மேலும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகள் முயற்சி செய்து சிறப்பாகச் செயல்பட்டு மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் ஊக்கம் அளிக்க வேண்டுமா அல்லது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் தொகையை அதிகரித்துக்கொண்டே போகும் வட மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமா? ஒன்றிய அரசு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், அதில் காணப்படும் முன்னேற்றங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. ஏற்கெனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்கள் பற்றி எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை. வட மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் அவர்கள் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுவார்கள் என்பதற்காக இந்த வழிகாட்டுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒரு வழிகாட்டுதலின்படி பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் கூடுதல் வருவாய் பகிர்வை பெறப் போகின்றன.

ஒன்றிய அரசு வரி வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்குச் செய்திருக்கும் மாபெரும் துரோகம் 2011 மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. இதுவரையில் எல்லா நிதிக்குழுவும் 1971 மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஒன்றிய நிதித் தொகுப்பிலிருந்து வரி வருவாயைப் பகிர்ந்து வந்தன. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் எனத் தென் மாநிலங்கள் மக்கள் தொகையைப் பெரியளவில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. இந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திய போது நிதிக்குழு வருவாயைப் பகிர்ந்தளிக்கும்போதும், நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரிக்கும்போதும் 1971 மக்கள் தொகையை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்று ஒன்றிய அரசு பலமுறை உறுதியளித்துள்ளது.

பலமுறை வழங்கப்பட்ட அந்த உறுதியை இப்போது காற்றில் பறக்கவிட்டு 2011 மக்கள் தொகை அடிப்படையில்தான் நிதியைப் பகிர்ந்தளிப்போம் என்றால் அது யாருக்குப் பயனளிக்கும்? மேலே கூறிய ஐந்து வட மாநிலங்கள்தான் பெருமளவில் பயன்பெறும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் 14ஆவது நிதிக்குழு பரிந்துரைத்ததால் தென் மாநிலங்கள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் நிதிப் பங்கீட்டை இழந்துள்ளன. இந்த அடிப்படையில் 15ஆவது நிதிக்குழுவும் 2011 மக்கள் தொகையைப் பரிந்துரைத்தால் இழப்பு மேலும் அதிகரிக்கும். இதனால்தான் தென் மாநில அரசுகளும், கட்சிகளும் தங்களது கவலையையும், எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்க வேண்டும் அல்லது நிதி அதிகமாகச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வதற்கு நிதிக்குழு யார்? எது மக்கள் நலத்திட்டம், எது மக்கள் நலத்திட்டம் இல்லை என்று தீர்மானிப்பதற்கு நிதிக்குழு யார்? நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க நிதிக்குழு யார்? நிதிக்குழுவிற்கு வழிகாட்டும் ஒன்றிய அரசு யார்? பாஜக மிகப்பெரும் அளவில் வெற்றிபெற்ற ஐந்து வட மாநிலங்களுக்கும் நிதியை மடைமாற்றம் செய்ய நிதிக்குழுவை கருவியாகப் பயன்படுத்துகிறது என்பது நமக்கு இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களைப் பெருமளவில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ள தென் மாநிலங்களைச் சீரழித்து அவர்கள் நினைக்கும் பாதையில் நம்மையும் பயணிக்க வைக்க நினைக்கிறார்கள். நிதிக்குழு என்ற அமைப்பை அரசியலுக்காக இதுபோன்று மிகவும் வெளிப்படையாகப் பயன்படுத்துவதால் ஏற்படப்போகின்ற சாதக பாதகங்களைத் தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது அதற்கெல்லாம் இவர்கள் அஞ்சாதவர்களா என்ற கேள்விதான் நம்முன் எழுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

மின்னஞ்சல் முகவரி: [[email protected]]

ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 1!

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon