தனிச்சிறப்பான மணத்துக்காகவும் காரச்சுவை குறைவாக இருப்பதாலும் குடமிளகாய் உணவுப் பட்டியலில் காய்கறியாகவும் பயன்படுத்தப்படுகிறது. உலக மக்களால் அதிகமாக உண்ணப்படும் குடமிளகாய் பச்சை, மஞ்சள், இளம் பச்சை, சிவப்பு நிறங்களில் உற்பத்தியாகிறது. இந்த சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாயை எந்த நிற குடமிளகாயிலும் செய்யலாம்.
**என்ன தேவை?**
குடமிளகாய் – 3 (பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணம்)
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2 (வேகவிட்டு எடுத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும்)
சீஸ் துருவல் – ஒரு கப்
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – கால் கப்
சதுரமாக நறுக்கிய கேரட் – கால் கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதனுடன் கேரட், உப்பு, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். மசாலா ரெடி.
குடமிளகாயை எடுத்துக்கொண்டு மேற்புறம் (மூடி மாதிரி) வெட்டிக்கொள்ளவும் (பார்க்க படம்). கீழ்ப்புறம் (அடிபாகம்) இருக்கும் குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு வெஜ் மசாலாவை நிரப்பவும், மூன்று குடமிளகாய்களில் நிரப்பிக்கொண்டு அதன் மீது சீஸைச் சரிசமமாகப் பிரித்துப்போடவும்.
ஒரு பானில் (Pan) எண்ணெய்விட்டு, சூடானதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து தயார் செய்துள்ள குடமிளகாய்களை அதில் வைத்து ஃப்ரை செய்யவும். எல்லா பக்கமும் நன்கு வேக வேண்டும். சிறிது நேரம் மூடி வைத்தும் வேகவிடவும். எல்லா பக்கமும் ஃப்ரை ஆனவுடன் அடுப்பை நிறுத்திப் பரிமாறவும்.
**[சண்டே ஸ்பெஷல் – மிக்ஸியும் மெயின்டனன்ஸும்!](https://minnambalam.com/health/2021/02/14/1/mixie-maintenance)**�,