சிலை காணும் சிலம்பொலி !

சிறப்புக் கட்டுரை தமிழகம்

ஸ்ரீராம் சர்மா


திராவிடம் என்பதை தேசிய கீதமானது தென்னிந்தியத்தின் அடையாளமாக கொண்டு பாடுகிறது.  

அந்த திராவிடத்தின் அடையாளமாக அன்று தமிழ் மொழிதான் திகழ்ந்தது!

தமிழில் இருந்து தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என கிளை பல கொண்டு போன போதிலும், ஆதி அடையாளமான தமிழ் கதகதப்போடு திராவிடமானது தனது சுற்றங்களை இன்றளவும் அரவணைத்தபடியே நிலைத்திருக்கிறது.

தேவாரத்தின் ஆறாம் திருமுறையானது, ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே எனப் போற்றி நிற்கிறது.

அதன் விரிபொருளாவது..  

மொழியின் ஆதி ஊற்று ‘ஓசை’ என்பதாகும்.

எழுத்தும் சொல்லும் தோன்றிய பின் அந்த ஓசையானது ‘ஒலி’ என்னும் அந்தஸ்தைப் பெற்று நின்றதாம்.

அந்த ஒலி யானதுதான் மெல்ல மெல்ல வடிவெடுத்து மொழியானதாம்.

மொழியானது பின்னாளில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலுக்கு ஏற்றதோர் இசையார்ந்த வடிவத்தைக் கொண்டு திரிந்தபடி பரவியது எனக் கொள்ள முடிகிறது.

மானுடருக்கான ஊடகமாக மட்டுமே இருந்த மொழியானது காலப் போக்கில் ‘தாய்மொழி’ என்னும் உணர்வுபூர்வமான நிலையினை எட்டிவிட,

தாய்மொழியின்பால் தன்னை இழந்து தன் மனதை இழந்து நிற்பதென்பது உணர்வின்பாற்பட்ட படைப்பாளர்களின் இயல்பாகி நிற்க…

பெற்ற தாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் இணையானதாகும் எங்கள் தாய்மொழி எனும் மனகதப்பேறிய நிலையினை அடைந்த மொழி அறிஞர்கள் யாவரும் தத்தம் தாய்மொழியினை ஓங்கிக் கொண்டாடலாயினர்.

அப்படியானதோர் உன்மத்த நிலையில்தான் பாரதியார் பாடினார்.

எங்கள் தமிழ் மொழி

எங்கள் தமிழ் மொழி

என்றென்றும் வாழியவே!

வானம் அறிந்த

அனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

பாரதிதாசனாரும் முழங்கினார்…

எங்கள் வாழ்வும்

எங்கள் வளமும்

மங்காத தமிழென்று

சங்கே முழங்கு!

பொங்கு தமிழர்க்கு

இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென

சங்கே முழங்கு!

அப்படியான ஆகிருதி கொண்ட பேராளர்களின் வழியில் வந்த எண்ணற்றோர் புகழுடைய திராவிடத் திருமண்ணில் தமிழ் மொழியை காலம் காலமாக சீராக்கி வைத்தார்கள்.

அதில், தமிழ்த் திறனாய்வு என்பது தனிப்பெரும் துறையாக நிற்கிறது.

திறனாய்வு இலக்கியக் கர்த்தாக்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக நின்றிலங்குகிறார் கட்டுரையின் நாயகனான சிலம்பொலி செல்லப்பனார்!

தமிழிலக்கியங்களை மட்டுமல்ல; அதனை ஊருலகமெங்கிலும் ஓங்கிப் பரப்ப தனது ஊணுடலையும் ஏறத்தாழ 90 ஆண்டுக் காலம் வரை செல்லரிக்காதபடி காப்பாற்றி வைத்த பேராளர் சிலம்பொலியார்!



கொங்கு நாட்டிலுதித்த தமிழ்க் கருவூலமான சிலம்பொலி செல்லப்பனாரது சிலையினை தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலியில் திறந்து வைக்கப் போவதாக அண்ணன் கொங்குவேள் சொன்ன தருணத்தில் நெஞ்சம்  நெகிழ்ந்து போனேன்.

ஆம், சிலம்பொலியாரை தமிழர்களாகிய நாம் நன்றியோடு போற்றி வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.

யார் இந்த சிலம்பொலி செல்லப்பனார் !

’எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்றுரைத்த அவ்வையாரின் நீதி  மொழிக்கு நேரிய உதாரணமாக நின்றிலங்கியவர் சிலம்பொலியார்.

ஆம், கணித ஆசிரியராக தன் வாழ்வைத் தொடங்கியவர் தமிழிலக்கியத்தின் பால் திரும்பிச் சாதித்தது தமிழன்னையின் ஆக்கினையே அன்றி வேறில்லை எனலாம்.

சிலப்பதிகாரத்தின் மீது செல்லப்பனார் கொண்ட பெருங்காதலைக் கண்டு ஆச்சரியத்த தமிழ்ப் பேராசான் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் 1954இல் அவருக்கு ‘சிலம்பொலி’ என்னும் பட்டத்தை அளித்து கௌரவித்தார்.

காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும் – நெஞ்சை அள்ளும் சீறா – பெருங் குணத்துக் கண்ணகி – திருக்குறள் இன்பத்துப்பால் – சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற எண்ணற்ற படைப்புகளின் வழியே வண்ணத்தமிழ் காவியம் படைத்த தமிழ்ச் செம்மல் சிலம்பொலியார்.  

சிலப்பதிகாரத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் வேட்கையோடு, தனது 90ஆம் அகவையில் பள்ளி மாணவர்கள் 90 பேருக்கு இளைய சிலம்பொலி என்னும் விருதினை அளித்து மகிழ்ந்தவர் என்றும்…

‘சிலம்புச் செல்வர்’ என ம.பொ.சி அவர்கள் அறியப்பட்டாலும் கூட அவருக்கு முன்பே ‘சிலம்பொலி’ பட்டம் செல்லப்பனாருக்கு அளிக்கப்பட்டு விட்டது எனவும் சிலம்பொலியாரோடு அணுகி வாழ்ந்த வழக்குரைஞரும் கம்பன் கழகத்தின் துணைச் செயலாளருமான அண்ணன் பால சீனிவாசன் நெகிழ்ந்து பகிர வியந்து போனேன்.

திருத்தணி மீட்புப் போராட்டத்தை ஆதியில் முன்னெடுத்தவர் ‘வடவெல்லைத் தமிழ் முனிவரென்றும்’ – ‘தமிழ்ப் பெரியார்’ என்றும் போற்றப்படும்  மங்கலங்கிழார் ஆவார்!

பெருமகனாம் அந்த மங்கலங்கிழாரின் அடிதொற்றி பற்பல தொண்டுகளை செய்து வந்தவர் சிலம்பொலியார். சென்னை கம்பன் கழகத்தில் ஒப்பாய்வு முறையினை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் சிலம்பொலியார்தான்.  என அவர் சொல்லிக் கொண்டே போக…  

சிலம்பொலியார் குறித்த நினைவலைகளுள் மெல்ல ஆழ்ந்தேன்…

எழுபதுகளின் மத்தியில் தந்தையார் ஓவியப்பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்கள் தமிழ்த்தாய்க்குத் திருவுருவம் ஒன்றை வரைந்து கொண்டிருந்த அந்த நாட்களில், பெசன்ட் ரோடு இல்லத்துக்கு தமிழாய்ந்த அவ்வை நடராசனாரும் சிலம்பொலியாரும் வருகை தருவார்கள்.

ஓங்கு தாங்காக வந்து நிற்கும் சிலம்பொலியார் சட்டென சம்மணங்காலிட்டு அமர்ந்தபடி சரமாரியாக இலக்கிய நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளும் விதத்தையும், “அண்ணா சொன்னபடி நீங்கள் தமிழ்த்தாயின் திருவுருவத்தை வரைந்து முடித்தாக வேண்டும். அதற்காக எந்த அளவிலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் ஐயா” என உருகிச் சொன்ன பாங்கையும் சிறுவனான நான் கண்ணாரக் கண்டு காமுற்றிருக்கிறேன்.

தந்தையார் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பின் திருவான்மியூர் இல்லத்தில் பெரியவர் சிலம்பொலியாரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

“தம்பி, 1968இல் எனது பெரும் உழைப்பால் வெளியான உலகத் தமிழ் மாநாட்டு மலரில் உனது தந்தையார் வரைந்த திருவள்ளுவரை பதிப்பித்திருக்கிறேன் தெரியுமா?”



“ஆம், ஐயா.. அதன் அட்டைப்படத்தைப் பிரித்தால் தாமரை மலர்வது போல படபடவென சிறு சிறு வண்ண அட்டைகள் பிரியக் கண்டு வியந்திருக்கிறேன். உள்ளே இருக்கும் ஓவியம் ஒன்றில், களிறு மேல் ஒருவன் அம்பு எரியும் புறநானூற்றுக் காட்சியினை ஓவியமேதை மாதவன் சார் அவர்கள்  அநாயசமாக வரைந்து வைத்த விதம் குறித்து எனது தந்தையார் வியந்து போற்றிச் சொன்னதையும் கேட்டுப் பிரமித்து நின்றிருக்கிறேன்.“

 ‘ஆம், ஆம்’ எனக் குதூகலித்துக் கொண்டவர் என்னை ஊன்றிக் கேட்டார்.

“அந்த மலர் உன்னிடம் உள்ளதா?“

 “இல்லைங்க ஐயா, யாரோ எடுத்துப் போய் விட்டார்கள்.”

முகம் சுருங்கிய சிலம்பொலியார் ஆழ்ந்த குரலில் கேட்டார்…

“தம்பி, உன் தந்தை ஒரு மரகதக் கல்லையோ, மாணிக்கத்தையோ உன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் இப்படி விட்டுக் கொடுத்திருப்பாயா?”

“………..”

“அதனினும் மேலானது புத்தகங்கள். மலர்கள். அவைகள் பொக்கிஷங்கள். இனிமேலும் இழந்து விடாதே. உன் தந்தையின் அறிவுச் சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முயற்சி செய். அதுதான் நீ உன் தகப்பனுக்கு செய்யும் கைமாறு.”

அதிர்ந்து பேச அறியாத பெருந்தகையாம் சிலம்பொலியார் அன்று கொதித்துப் பேசினார் எனில் அதன் உள்ளர்த்தம் ‘நல்லனவற்றை இழந்து விடக் கூடாதுடா தம்பி’ என்பதுதான் என உணர்ந்தபடி அவரை வீழ்ந்து வணங்கி வந்தேன். இன்றளவும் தந்தையாரின் படைப்புகள் அனைத்தையும் கண்ணெனக் காத்து வருகிறேன்.  

அறிவுச் சொத்தின் வழியே வருங்கால தலைமுறையினைரை உயர்த்த துடித்த சிலம்பொலியாரின் அந்த தீரா வேட்கை இதோ நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் எதிர்வரும் 23ஆம் திகதியில் நிறைவேறவிருக்கிறது.



ஆம், அந்த 700 சதுர அடியின் மேல் தளத்தில் சிலம்பொலி செல்லப்பனார் சிலையாக நிற்பது அழகு எனில், வாழ்நாளெல்லாம் அவர் கண்டு சேகரித்து வைத்த அத்துணை புத்தகச் செல்வங்களையும் அடுத்த தலைமுறையினர் படித்து முன்னேற வழிவகுத்து வைக்கும் அவரது வழித்தோன்றல்களின் ஒன்றிணைந்த நோக்கம் பேரழகு!

திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரும் திருப்பெருந்திரு பேரூர் அடிகளாரும் சிலம்பொலியாரின் சிலை திறப்பு விழாவைச் சிறப்பிக்க வருகை தருவதென்பது கொங்கு மண்ணுக்கே உரிய அருங் கேண்மையாகிறது.

சிலம்பொலியாரின் வழித்தோன்றல்களாகிய அண்ணன் கொங்குவேள், அக்கா மணிமேகலை உள்ளிட்ட குடும்பத்தாரையும், நிலம் அளித்து பெரும் புண்ணியம் கொண்ட அக்கா திருமதி பூங்கோதை செல்லதுரை அவர்களையும் நெஞ்சார வாழ்த்தி வணங்குவது எனதெளிய கடமையாகிறது!

கல்விக்கு நாமக்கல் என்பார்கள். அந்த நாமக்கல் இளைஞர்களை விழைந்து கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து சிலம்பொலியாரின் படிப்பகத்துக்கு ஒருமுறையேனும் செல்லுங்கள். அந்த காலத்து தமிழ்ப் பொக்கிஷத்தை மெல்லப் புரட்டிப் பாருங்கள். மேற்குலகத்தால் காட்ட முடியாத அறிவுச் செல்வங்களை எல்லாம் ஆங்கே காண்பீர்கள்.

இளையோரே, உங்களுக்காகத்தான் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்திருக்கிறார் சிலம்பொலி செல்லப்பனார். அந்தப் புதையலைக் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தை வளமார்ந்த பூமியாக எட்டி எடுத்து வெல்லுங்கள்.

வாழிய சிலம்பொலியாரின் தமிழ் தாகம்!

வாழியவே தமிழாய்ந்த திராவிடத் திருநாடு!  

 

கட்டுரையாளர் குறிப்பு

Chandrayaan3 and Shiv Shakti point Sriram Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

+1
1
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *