சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – இறுதி பாகம்!

சிறப்புக் கட்டுரை

நோக்கம்

தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், சாதி இல்லை என்ற கற்பிதத்தை உடைக்கும் நேரடி கள ஆய்வுத் தொடர். லாஜிக்ஸ் ஆசிரியர் கதீஜா, சாதிக்கு எதிரான சமூக அறிஞர் முரளி சண்முகவேலன் ஆகியோரது கலந்துரையாடலே இத்தொடரின் போக்கு.

சாதி எப்படி சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக பரவியுள்ளது என்பதையும், களத்தில் உள்ள அவல சூழ்நிலைகளையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையுமே சாதி தன்னுடைய இரும்புக்கரங்களால் இறுகப்பற்றி உள்ளது. சாதிய அவலங்களை எடுத்துரைக்கும் இத்தொடரினை சமூக அக்கறையுடன் செயல்படும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

 

கதீஜா: நீங்கள் டேட்டா & சொசைட்டி, கிரிட்டிகல் காஸ்ட் அண்டு டெக் சிலபஸ்ஸில்  இருந்த காலத்தில் இல்லாத மிக முக்கியமான வளத்தை உருவாக்கியுள்ளீர்கள். தொழில்நுட்பத்தின் வழியே சிந்திக்கும் போது, ஒரு சாதியின் மீதான விமர்சனப் பார்வைக்கு நமக்கு என்ன தேவை என்பதைப் பற்றி மேலும் கூற முடியுமா?

முரளி: “சோசலிஸ்ட்” என்று பரவலாகக் கருதப்படும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியை மேற்கோள் காட்டி நான் தொடங்குகிறேன். அவர் ஜவஹர்லால் நேரு என்ற காஷ்மீரி பண்டிட் (பிராமண) அறிஞர் ஆவார். இந்தியாவில் பல நல்ல விஷயங்களுக்கு அவர் காரணமாக இருந்தார், அதை நான் மறுக்கப் போவதில்லை.

ஆனால், “அணைகள் இந்தியாவின் நவீன கோவில்களாகும்” என்ற அவரின் சுவாரஸ்யமானக் கூற்றை நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். அதற்கு என்ன பொருள்? இந்தியக் கோயில்கள் எல்லோருக்குமானவை அல்ல, அணைகளும் எல்லோருக்குமானவை அல்ல.

ஜாதியக் கருத்துகள் வரலாற்று ஒப்புமைகளிலும் உருவகங்களிலும் அடிக்கடி வெளிப்படுகின்றன. முதலில் தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் தலித்துகளும் ஒடுக்கப்பட்ட ஜாதிக் குழுக்களாகவும் தான் இருப்பார்கள்.

 

ஏனென்றால் அவர்கள் தான் உழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் உழைப்பவர்கள், விவசாயிகள், மரபியல் வல்லுநர்கள், அவர்கள் தான் உண்மையில் அணைகளைக் கட்டியவர்கள். அந்த மக்கள் தான் துணி நெய்தல் என எல்லாவற்றையும் செய்பவர்களாக இருந்தார்கள்.

ஆனால் இந்தியச் சுதந்திரம், காலனித்துவ எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய வழக்கமான வரலாற்றுப் பதிவுகளால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் தெரியாது” என்று சவர்ணா அடிக்கடி கூறுவார்.

எனவே, இங்கே கொன்று புதைக்கப்பட்ட வாதங்களுக்கு உயிரூட்டுவதே எனது தேடலாகும். உண்மை என்னவென்றால், நீண்ட காலமாக நாம் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்து வருகிறோம். ஆனால் இப்போது, முழுக் கதையும் முற்றிலுமாகத் திரிக்கப்பட்டு விட்டது.

கதீஜா: ஒதுக்கப்பட்ட பகுதியான நவாஜோவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படுவது பற்றிய லிசா நகமுராவின் கட்டுரையில், ஒதுக்கப்பட்ட அந்தப் பகுதியை உற்பத்தி செய்வதற்கு  ஃபேர்சைல்ட் ஃபேக்டரி தேர்ந்தெடுப்பதற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

அத்துடன், உள்நாட்டுக் கைவினைஞர்களும் நெசவாளர்களும் டிரான்சிஸ்டர் அல்லது செமிகண்டக்டர் உருவாக்குவதற்கு தேவையான நுணுக்கங்களில் கவனமாக இருந்தார்கள் என்பதையும் கண்களால் பார்த்தே அதன் துல்லியத்தை தெரிந்து கொள்ளும் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்கள் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

முரளி: இந்தியாவில் 1,00,000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருந்தன. அவை அனைத்திற்கும் பூர்வகுடிகள் பெயரிட்டிருந்தார்கள். பெயரிட்டு அவை அனைத்தையும் மரபணு ரீதியாக பூர்வகுடிகளும், தலித்துகளும் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

த்தா குறையற்ற பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் அறிவியல் சாதனை எதனோடும் இதை ஒப்பிட முடியுமா? இப்போது நம்மிடம் 6,000 வகைகள் மட்டுமே உள்ளன. இந்த உதாரணத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பாக இருக்கிறது.

தலித்துகளும், பூர்வகுடிகளும் பல நூற்றாண்டுகளாக மரபணுக்களை சேமித்து வைத்திருந்திருந்தனர். அந்த உண்மையை மீண்டும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்!

கதீஜா: இனவாதமும் சாதியமும் வேறு வேறாக இருந்தாலும் இரண்டிற்குமான தொடர்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

முரளி: அனைத்து ஒடுக்கப்பட்ட குழுக்களும் தவிர்க்க முடியாத, இயற்கையாகவும் தன்னிச்சையாகவும்  உருவான ஒரு ஒற்றுமைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இயல்பானது தான்.

உதாரணத்திற்கு, நான் அவமானப்படுத்தப்பட்டேன். சாதியின் அடிப்படையில் நான் அவமதிக்கப்பட்டேன், தண்டிக்கப்பட்டேன். கறுப்பின மக்களும் இனத்தின் அடிப்படையில் அவமானப்படுத்தப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள், தண்டிக்கப்பட்டார்கள்.

அதன் விளைவாக ஏற்படும் சவால்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்கும்போது, அந்த  ஒற்றுமைப் பாலம் எங்களை இணைக்கும். நாங்கள் இணைந்து செயல்படலாம். நீங்கள் தண்டனைக்கு ஆளாகியுள்ளீர்களா? நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். நாம் எப்படி ஒன்றினைந்து செயல்படுவது? இருப்பினும், மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

கறுப்பின மக்களுக்கும், தலித்துகளுக்குமான தூண்டுதல்கள் வேறு வேறானவையாகும். நம்மைத் தாழ்த்துவதற்கு தூண்டுதலாக இருப்பது எது? இது மிகவும் தனித்துவமானதும் மற்றவைகளிலிருந்து வேறுபட்டதும் விதிவிலக்கானதுமாகும்.

அதற்கென தனித்த வரலாறும் சமூகவியலும் அரசியல் சிக்கல்களும் வர்க்க மற்றும் பாலின சிக்கல்களும் உள்ளன. ஆகையினால், நான் ஒரு கறுப்பினத்தவரிடம், “நம் இருவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை உள்ளது” என்று ஒரு போதும் சொல்ல முடியாது எனக் கருதுகிறேன். ஆனால் பிரச்சனையின் விளைவால் நமக்கு ஏற்படும் சவால்கள் ஒரே மாதிரியானது என்று சொல்லலாம்.

நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஆனால், நீங்கள் உண்மையில் தினசரி என்ன விதமான அவமானங்களை எதிர்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியுமா? அரசியல் ரீதியாக நான் வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கு நீங்களும் வந்திருப்பதற்கு உங்களுக்கு எது தூண்டுதலாக இருந்தது என்பது எனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது.

துரதிர்ஷ்டவசமாக, இசபெல் வில்கர்சனின் புத்தகம் [காஸ்ட்: தி ஆரிஜின்ஸ் ஆஃப் அவர் டிஸ்கன்டன்ட்ஸ்] இனவாதத்தையும், சாதியத்தையும் சமமாக வைத்துப் பார்க்கிறது. ‘சாதியை உயர் மட்டத்தில் வைத்து, அதற்கு கீழ் இனவாதம், இனப்படுகொலை, பிறகு இந்தியா இருக்கிறது’ என்பது போன்ற ஒருவிதமான ஏணிப்படிகள் போல எல்லாவற்றையும் அவர் அடக்கி விடுகிறார்.

நான் இசபெல்லாவின் கருத்துகளை நிராகரிக்கவில்லை, ஆனால் என் சக மனிதர்களின் துயரம், அவமானம், சிரமங்கள் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். எனது தலித் சகோதரிகளைப் போன்ற அதே தூண்டுதல்கள் தான் எனக்கும் இருக்கிறது என்று நான் கூற முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், அனுபவ ரீதியாக நாங்கள் ஒரே பொதுவான தளத்தில் இருக்கிறோம் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். நாம் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் அவமதிக்கப்பட்டுள்ளோம். நம்மில் சிலர் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். நம்மில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

நமக்கு இருக்கும் பொதுவான சவால்களைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படும் அதேவேளையில் நாம் ஒருவரின் முக்கியமான தனித்துவமான தூண்டுதல்களை அவமதிக்காமல் இருப்பது அவசியமானதாகும். அதுவே மரியாதைக்குரியதாக இருக்கும். இப்போது எனக்கு அழுகை வருகிறது.

கதீஜா: ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி! ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பதற்கு பாதிக்கப்பட்டிருப்பது அவசியமாகிறது. ஒரு எச்சரிக்கை உள்ளது: வெவ்வேறு இனங்கள் ஒன்றுபடுவதை சரி அல்லது தவறு என நாம் வாதிட்டாலும், அநீதிக்கு உள்ளானது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் சாத்தியமாகும்.

முரளி: நாம் இருவரும் செயல்படும் விதமும், கலந்துரையாடும் விதமும், ஒருவரை ஒருவர் எப்படி மரியாதையுடன் நடத்துவது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு பொதுவான பாலம் உள்ளது.

ஆனால் எனக்கு எவை தூண்டுதல்களாக இருந்ததோ அதை நீங்களும், உங்களுக்கு எவை தூண்டுதல்களாக இருந்ததோ அதை நானும் சிறுமைப்படுத்தவில்லை. நான் அனுபவித்தவற்றை நீங்களும், நீங்கள் அனுபவித்தவற்றை நானும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

என் மனைவியிடம் சென்று, கதீஜா என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும் என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அது முட்டாள்தனமானதாகும். ஆனால், நாம் ஒன்றிணைந்து இருப்பதற்கான காரணம் எனக்குத் தெரியும். ஒருவரை ஒருவர் மதிப்பதற்கு இதுவே சரியான உதாரணமாகும். ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கிறோம்.

குறிப்பு: இந்த தொடரின் மூலக்கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முதல் பாகம்: சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – பாகம் 1!

இரண்டாம் பாகம்:  சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – பாகம் 2!

ஆசிரியர் குறிப்பு:

ஜே. கதீஜா 

ஜே. கதீஜா அப்துல் ரஹ்மான் லாஜிக்(ஸ்)ஸின் ஆசிரியர் ஆவார். ஜார்ஜ்டவுன் சட்ட மையத்தின் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார். ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட் மற்றும் UCLA வின் சென்டர் ஃபார் கிரிட்டிகல் இன்டர்நெட் இன்கொய்ரியின் முந்நாள் உறுப்பினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இன்சைட் இன்ஸ்டிட்யூட்டில் வீ பி இமேஜினிங் நிறுவனத்தை நிறுவியவர்.

தி யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், எச்சிடிஇ துறையுடன் இணைந்து தி அதர்வைஸ் ஸ்கூலை நிறுவினர். மிக சமீபத்திய வெளியீடுகளில் கொலம்பியா ரேஸ் லா ஜர்னல், தி ஃபுனாம்புலிஸ்ட் மற்றும் பராபிராக்ஸிஸ் ஆகியவை அடங்கும். கதீஜாவின் ஆராய்ச்சி அமெரிக்க குடும்பக் காவல் துறை மற்றும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவின் தொழில்நுட்பத்திற்குள்ளான முன்கணிப்பு அபாய மாடலிங்கில் கவனம் செலுத்துகிறது.

முரளி சண்முகவேலன்

சாதிக் கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட முரளி சண்முகவேலன் சாதிக்கு எதிரான அறிஞர் ஆவார். அவருடைய ஆராய்ச்சியானது ஊடகங்களிலும் தகவல் தொடர்பு ஆய்வுகளிலும் டிஜிட்டல் கலாச்சாரத் தளங்களிலும் பொறுப்பேற்க மறுக்கப்படும், குறிப்பாக சாதிக் கொடுமைகள் போன்ற பாதுகாக்கப்பட்ட வகைகள் தொடர்பான சிக்கல்கள் பற்றியதாகும்.

மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *