நோக்கம்
தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், சாதி இல்லை என்ற கற்பிதத்தை உடைக்கும் நேரடி கள ஆய்வுத் தொடர். லாஜிக்ஸ் ஆசிரியர் கதீஜா, சாதிக்கு எதிரான சமூக அறிஞர் முரளி சண்முகவேலன் ஆகியோரது கலந்துரையாடலே இத்தொடரின் போக்கு.
சாதி எப்படி சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக பரவியுள்ளது என்பதையும், களத்தில் உள்ள அவல சூழ்நிலைகளையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையுமே சாதி தன்னுடைய இரும்புக்கரங்களால் இறுகப்பற்றி உள்ளது. சாதிய அவலங்களை எடுத்துரைக்கும் இத்தொடரினை சமூக அக்கறையுடன் செயல்படும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
கதீஜா: மாவோவின் தலைமையிலான சைனீஸ் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மத்தியக் குழுவிலும் இதே நிலைதான் இருந்தது. இதில் பெரும்பான்மையாக ஹான் இனத்தவர் தான் இடம் பெற்றிருந்தார்கள், என்றபோதும் சீனாவில் உள்ள மற்ற தேசிய இனத்தவரைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என ஒருபோதும் வெளிப்படையாகக் கூறியதில்லை. எத்தியோப்பியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிகளின் மத்திய குழுக்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால், பெரும்பாலும் அபிசீனியர்கள் தான் இருந்தார்கள்.
முரளி: அதனால் தான் யாரேனும் என்னிடம் அவர்கள் ஒரு மார்க்சிஸ்ட் என்று கூறினால், அவர்களை நம்புவதற்கு முன்னர் அவர்களின் அடையாளத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தெற்காசியச் சமூகத்தில் மார்க்சியம் என்பது ஒரு வகையான சலுகை பெற்ற விருப்பமே தவிர, தீவிரமான சமூக இயக்கங்களுக்கு ஏற்ற முறையாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
கதீஜா: இந்தியர்களுக்கு சமூகப் பிரிவு என்ற கட்டுப்பாடு இருக்கிறது என்பதையும், அதன் தொடர்ச்சியாக, சிலிக்கான் பள்ளத்தாக்கில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தாமல் சாதி எவ்வாறு மையமாக உள்ளது என்ற கருத்தைக் குறித்தும் நான் நிறைய யோசித்து வருகிறேன். இந்தத் தொடர்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?
முரளி: தெற்காசியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் நிலை சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் உருவாக்கப்படுகிறது. இது சாதிய அமைப்பின் படிப்படியான, இயல்பான, முறையான விளைவாகும். முதலாவதாக, தென்னிந்தியப் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் வேலை செய்யும் தங்கள் உறவினர்கள் மற்றும் மூலதனம் ஆகிய தொடர்பின் மூலம் அங்கு குடிபெயரத் தொடங்கினார்கள். இரண்டாவதாக, இந்தியாவின் ஆட்சிப் பணியாளர் ஏஜென்சியுடனான அவர்களது தொடர்பு, எளிதாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதற்கு உதவியது.
அமெரிக்காவில் ஓரிரு தலைமுறைகளாக வாழும் தென்னிந்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடிய ஒருவரிடம் நீங்கள் உரையாடினால், அவர்கள், “என் தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தார்” என்று கூறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. வழி வழியாக வரும் சமூக மூலதனம் தற்செயலாக விவரிக்கப்படுகிறது.
மூன்றாவதாக, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள ஆதிக்க சாதியினரால், தீவிரமான சமூக நீதி இயக்கங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாததும், சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு உத்வேகம் அளிப்பதில் ஒரு பங்காற்றியது.
“எங்களால் இங்கே எதுவும் செய்ய முடியாது.” என்று முடிவெடுத்தார்கள்.நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் பி.எச்.டி செய்து கொண்டிருந்த தீவிர தமிழ் பார்ப்பனப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் நான் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு, என்னிடம், “அடடா, நீ தமிழ் அரசியல்வாதி மாதிரியே பேசுகிறாய்.
லண்டனில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஏன் நீ தாய்நாட்டிற்குச் சென்று சீர்திருத்தம் செய்யக்கூடாது? ” என்று கேட்டார். பதிலுக்கு, “அப்படியானால் நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவள், “என்னால் உனக்கு உதவ முடியும் (அங்கிருந்தே உன் வேலையைச் செய்வதற்கு)” என்று பதிலளித்தாள்.
இங்கு சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை நீ பார்க்கிறாய், “நீ தாய் நாட்டிற்கு திரும்பிச் சென்றுவிடு. நான் இருக்கும் இடத்தில் நான் வசதியாக இருப்பதால் நான் இங்கேயே இருப்பேன்.” இது, சமகாலத்தில் புலம்பெயர்ந்தவர்களின் சாதி அரசியலை விளக்கும் ஒரு உதாரணமாகும்.
தலித்துகளும் சமமான நிலையை எட்டும் போது, பார்ப்பனர்கள் பதவிகளைப் பெறுவதற்கு உதவும் உயர் அதிகாரத்தையும் அதற்குத் துணைபோகும் தொடர்புகளையும் அவர்கள் மறைமுகமாக வைத்துக்கொள்ளும் தந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள்.
கதீஜா: தொழில்நுட்ப-தீர்வுவாதம் என்பதிலிருந்து இந்த இயந்திரங்கள் சமூக-தொழில்நுட்ப அமைப்புகள் என்று வலியுறுத்தும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்த நகர்வு, நாமிருக்கும் இந்த இடத்தில் சமூகம் என்பதை எப்படி வரையறுக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்தும் விவாதத்துடன் இணைக்கப்படவில்லை. சாதியை விமர்சிக்கும் அணுகுமுறை அதைப் பற்றி என்ன கூறுகிறது?
ஆண்டிபட்டியில் தலித்துகளால் நடத்தப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டம்
முரளி: நான் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உதாரணம் தருகிறேன். “pariah” என்ற சொல் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் பிற ஆங்கில அகராதிகளில் அதன் அசல் சமூக சூழலில் இருந்து எடுக்கப்பட்ட பொதுவான வார்த்தையாக குறியிடப்பட்டுள்ளது. pariah என்ற சொல் பறையர் என்ற சொல்லிலிருந்து வந்தது.
அதன் சொற்பிறப்பியல் பொருள் தமிழில் இருந்து வந்ததாகும். பறையர் என்றால் பறை. நான் ஒருவரை தமிழில் “ஏய் பறையா” என்று அழைத்தால், அது சாதி இழிவாகவே கருதப்படும். இது மிகவும் அவமானகரமானது. இது மிகவும் மனிதாபிமானமற்றது.
அந்த வார்த்தைக்கு இப்போது என்ன நேர்ந்தது? ஆங்கிலேயர்கள் சாதி அமைப்பை மறுசீரமைத்தபோது, பறையர் என்பது “யாரோ ஒதுக்கப்பட்டவர்” என்பதற்கான பொதுவான அடையாளக் குறியீடாகப் புரிந்துகொண்டனர். அதனால் இப்போது, யுகே ஊடகங்கள் உக்ரைன் ஒரு “பரியா நாடு” என்று கூறுகின்றன.
கல்வியாளர் மத்தியில் ஹன்னா அரெண்ட், அடிப்படையில் யூதர் ஒரு பரியா என்று கூறினார். மேக்ஸ் வெபர், நவீன ஊடகங்களில் பத்திரிக்கையாளர்களின் நிலையைக் குறிப்பிடுகையில் “பத்திரிகையாளர்கள் ஒரு வகையான பரியா சாதி” என்று எழுதினார். மேற்கத்திய கல்விசார் உலகில் இந்தச் சொல் அதன் சாதியத் தோற்றத்துடன் தொடர்பற்று எப்படிப் பரவுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
சாதிய வன்முறையைத் தடுக்க மறுக்கும் இந்தப் போக்கு தான் சமூக ஊடகங்களின் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் பாகுபாடு நிறைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த தளங்கள் பாரபட்சமான நடத்தையைக் கண்காணிக்கின்றன, தங்களிடம் உள்ள வெறுப்பு பேச்சு பட்டியலுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை வடிகட்டி அடையாளமிடுகின்றன.
கறுப்பு எதிர்ப்பு என்பது சமூக ஊடகத்தை இயக்கும் ஒரு மைய அனிமேஷன் சக்தியாக இருந்தாலும், N இல் தொடங்கும் வார்த்தையை கடினமான R உடன் இடுகையிடுவது ஒரு முக்கியமான சொல்லாகக் கருதப்படுகிறது. அந்த சொல் தானாகவே குறியிடப்பட்டு, புகாரளிக்கப்பட்டு, அகற்றப்பட வேண்டும்.
அது தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் விஷயம் என்னவென்றால், குறிப்பாக கறுப்பின மக்களை குறிவைத்து சொல்லப்படும் அடிமை முறை, இனவெறி ஆகியவற்றின் வரலாறுகளில் வேரூன்றிய ஒரு இழிவான வார்த்தையாக இது தெளிவாக உள்ளது.
ஆனால் அதுவே, “பரியா” என்ற வார்த்தையின் குறிப்பிட்ட சமூக முக்கியத்துவமும் தோற்றமும், இயங்குதள உள்ளடக்க தணிக்கையின் தர்க்கங்களில் கூடத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதன் விளைவாக, இன்று, ஒரு ஆதிக்க சாதிக்காரர் ஆன்லைனில் ஒருவரிடம், “த்தா… வாயை மூடுடா பறப்பயலே” என்று சொல்ல முடியும்.
இதனால் பாதிக்கப்பட்டவர் சமூக ஊடக தளத்திற்குச் சென்று, “எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, யாரோ ஒருவர் என்னை பறப்பயலே என்று அழைத்தார், பாருங்கள்” என்று சொன்னால், “அதனால் என்ன? இதில் எந்தத் தவறும் இல்லையே, இது ஆங்கில அகராதியில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என்ற அரசியல் ரீதியான சாதாரண வார்த்தை தான்.” என்று தான் பதில் வரும்.
எனவே, மிக இயல்பாகவும், மிகக் கடுமையாகவும் புழங்கக்கூடியதாகிவிட்டது, மேலும், சொரணையின்றி சாதியைப் பற்றி பேசுவதே டிஜிட்டல் கலாச்சாரமாக இருக்கிறது. தலித்துகளும் ஒடுக்கப்பட்ட சாதியினரும் அவர்களை மட்டுமே குறிவைத்து செய்யப்படும் அவமானத்தாலும் எல்லை மீறிய வார்த்தைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதற்கு எதிராக டிஜிட்டல் அல்லது வெளி உலகில் சொற்பமான பாதுகாப்புகளே வழங்கப்படுகின்றன.
கதீஜா: சிறாரிடம் முறை தவறி நடந்து கொள்வது அல்லது புறக்கணிப்பது என்று யாராவது உங்கள் மீது குற்றம் சாட்டினால், அப்போது இருந்த (அல்லது இருந்ததாக சந்தேகிக்கப்படும்) மொத்த குடும்ப உறுப்பினர்களும் விசாரணையின் போது மாநில மையப் பதிவேட்டில் (SCR) எப்படி பதிவு செய்யப்படுகிறார்கள் என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது.
எனவே பெற்றோர்கள், தாத்தா பாட்டி, உறவினர்கள், பாலியல் உறவில் இருப்பவர்கள், காதல் இணையர்கள் என அனைத்து உறவினர்களும் SCR இல் பதிவு செய்யப்படுவார்கள். இன்றுவரை, அலெஹேனி ஃபேமிலி ஸ்கிரீனிங் டூல் (AFST) இல் உள்ள முதன்மையான ஆபத்துக் காரணி, அவர்களே ஒப்புக்கொண்டபடி, “தாய்க்கு குழந்தை நல வரலாறு உள்ளதா?” என்பதாகும்.
இது வழி வழியாக வரும் சிதைந்த உறவுகள், தொடர்ச்சியான கவனிப்பு, கண்காணிப்பு மற்றும் “தடுப்பு சேவைகள்” ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
உங்களின் முக்கியமான சாதிப் புலமையுடன் சேர்த்து யோசித்துப் பார்த்தால், குடும்ப காவல்துறைக்கும் அவர்களின் இயங்கும் முறைகளுக்கும் உயிரூட்டும் பிரதானக் கேள்வியை “பெற்றோர்கள், குறிப்பாக ஏழை கருப்பின தாய்மார்கள் தங்கள் தவறான நடத்தைகளால் அடுத்த தலைமுறையினரும் கெட்டுப் போகாமல் எவ்வாறு தடுப்பது?” என்று மாற்றிக் கேட்பதற்கான ஒரு வழியாகும்.
AFST உருவாக்கியவர்களில் ஒருவரான எமிலி புட்னம் ஹார்ன்ஸ்டீன், புதுமையை விரும்பும் ஒரு பழமைவாதியான வெள்ளை இனத்தவர், ஆச்சரியப்படும் வகையில், இரண்டு கறுப்பின குழந்தைகளின் வளர்ப்புத் தாயான இவர் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டிற்காக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
கறுப்பின மக்கள் விகிதாச்சார அடிப்படையில் அதிகமானோர் சிதைந்து போனவர்களாக இருப்பதனால் விகிதாசார அளவில் அதிகமானோர் AFST யால் குறிவைக்கப்படுகிறார்கள், அத்துடன் சிதைந்து போன கறுப்பின வீடுகளில் கறுப்பின குழந்தைகள் நலிவடைவது தான் உண்மையான இனவெறியாக இருக்கும் என்று கூறினார்.
நியூசிலாந்தில் குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவரும் சுகாதார பொருளாதாரவியல் பேராசிரியருமான ரேமா வைத்தியநாதன் அவரது கூட்டாளி ஆவார். இலங்கையின் சாதி அரசியலைப் பற்றி என்னால் சரளமாகப் பேச முடியாது.
ஆனால், புதுமையை விரும்பும் அதே அளவிற்கு பழமைவாதத்தையும் வெள்ளையர்களின் ஆதிக்க மனப்பான்மையையும் கொண்டிருக்கும் வைத்தியநாதனை தொடர்புபடுத்தி நிலைநிறுத்துவதைப் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்க முடியும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
முரளி: ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம். முன்கணிப்பு கருவிகள் அடிப்படையில் சார்புடையவையாகவே இருக்கும். நீங்கள் எதை கணிக்க முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் என்ன விளைவுகளைப் பெறுவதற்காக நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்? இந்தக் கேள்வியே சமூகச் சார்புகளைக் கொண்டுள்ளது. பணக்காரர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கணிக்க முயற்சிக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா?
கதீஜா: நான் இந்த கேள்வியை ரசிக்கிறேன். ஆனால், அவர்கள் ரசிக்க மாட்டார்கள்.
முரளி: அவர்கள் அதைக் கணிக்கப் போவதில்லை. அமைப்பிற்கு யார் குடைச்சல் கொடுக்கிறார்கள் என்பதைத் தான் அவர்கள் கணிப்பார்கள். அமைப்பிற்கு குடைச்சல் கொடுக்கும் மக்களைப் பற்றிய இந்த இனவாதக் கருத்தே ஒரு சார்புடைய கேள்விதான்.
எனவே நாம் ஒரு படி பின் சென்று யோசிக்க வேண்டும். முன்கணிப்பு கருவிகள் என்பது ஏதோ புதிதல்ல, குறிப்பாக சாதிய அமைப்பிலிருந்து வரும் என்னைப் போன்றவர்களுக்கு புதிதல்ல. “விலகல்” அல்லது வழி வழியாக வரும் தவறான நடத்தையைக் கணிக்கும் விருப்பம் நமது சமூக அமைப்புகளுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது தெளிவாகிறது.
நான் வளரும் காலத்தில், என் அப்பா தனது சம்பளத்தை மாதத்தின் முதல் நாளில் வீட்டிற்கு கொண்டு வருவார், அது பதினைந்தாவது நாளில் முடிந்து விடும், பின்னர் நாங்கள் கடன் வாங்கித்தான் ஓட்ட வேண்டியிருந்தது. இந்த நிலையே தொடரும்.
பொருட்களைக் கடனில் வாங்குவதற்காக, என் அம்மா மளிகைக் கடைக்குச் செல்ல வேண்டும் அல்லது எங்களை அனுப்புவார். ஒரு வார காலத்திற்குள் திருப்பிச் செலுத்திவிடுவோம் என்று அவர் எப்போதும் உறுதியளிப்பார். திரும்பத் திரும்ப, மளிகைக் கடைக்காரர்கள், “இல்லை, இதற்கு மேல் நாங்கள் உங்களுக்கு கடன் தரமாட்டோம். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் இல்லை” என்பார்கள்.
அது ஒரு முன்கணிப்பு கருவியாகும். எங்களுக்கு கொடுக்கப்பட்டக் கடனை நாங்கள் முறையாக சரியான நேரத்தில் திருப்பிக் கொடுத்த போதிலும், எங்கள் சாதியின் படிநிலை காரணமாக எங்கள் குடும்பத்தை தகுதியற்றவர்கள் என்று வகைப்படுத்தும் அது ஒரு முன்கணிப்பு கருவியாகும்.
அதனால் என் அம்மா ஒவ்வொரு முறையும் இரைஞ்ச வேண்டியிருந்தது, அது அவமானமாக இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு முறை அந்த ஆள் என் அம்மாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற போது, என் அம்மா அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
முன்கணிப்பு கருவிகள் மிகவும் சமூகச் சார்புடைய அமைப்பாகும். அதில் நடுநிலை என்று எதுவும் இல்லை. அதனால், அலெகெனி ஃபேமிலி ஸ்கிரீனிங் டூலைப் பற்றி நான் படித்தபோது, “என்ன எழவுடா இது” என்று சொல்லிக் கொண்டேன்.
இந்த முன்கணிப்பு மாதிரி எனது குடும்பத்திற்கும் அவர்களின் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் அபாயத்தை எவ்வாறு வகைப்படுத்தும்? அவர்கள் பயன்படுத்தும் அளவீடுகள் என்ன? தானியங்கு முடிவெடுக்கும் அமைப்புகள் அல்லது முன்கணிப்பு ஆபத்து மாதிரிகள் எப்போதும் இனம், பாலினம் மற்றும் சாதிய வகையிலான அளவீடுகளைப் பற்றியதாகும்.
டிஜிட்டல் மயமாவதற்கு முந்தைய உலகின் அளவீடுகள் சமூகவியல் ரீதியாக வழக்கொழிந்து போயிருந்தாலும் அந்த அளவீடுகள் டிஜிட்டல் உலகிலும் பயன்படுத்தப்படுகின்றன. AFST பற்றி நான் படித்த போது முற்றிலும் தளர்ந்து போனேன். இந்த கருவிகள் அறவே இருக்கக்கூடாது.
ரேமா போன்ற ஒருவர் சில காரணங்களுக்காக அமைதியற்றவராக இருக்க வேண்டும். முதலாவதாக, அவள் வெள்ளையர் அல்லாத பெரும்பான்மையான மக்களின் பிரதிநிதியாக இல்லை. மேற்கில் உள்ள பெரும்பாலான மாநிற மக்கள் இன சமத்துவத்தைப் பற்றி கற்பனையாகப் பேச விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த சாதி சலுகைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் ரேமா தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
குறிப்பு: இந்த தொடரின் கடைசி பாகம் வருகின்ற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகும். இந்த தொடரின் மூலக்கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முதல் பாகம்: சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – பாகம் 1!
ஆசிரியர் குறிப்பு:
ஜே. கதீஜா
ஜே. கதீஜா அப்துல் ரஹ்மான் லாஜிக்(ஸ்)ஸின் ஆசிரியர் ஆவார். ஜார்ஜ்டவுன் சட்ட மையத்தின் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார். ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட் மற்றும் UCLA வின் சென்டர் ஃபார் கிரிட்டிகல் இன்டர்நெட் இன்கொய்ரியின் முந்நாள் உறுப்பினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இன்சைட் இன்ஸ்டிட்யூட்டில் வீ பி இமேஜினிங் நிறுவனத்தை நிறுவியவர்.
தி யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், எச்சிடிஇ துறையுடன் இணைந்து தி அதர்வைஸ் ஸ்கூலை நிறுவினர். மிக சமீபத்திய வெளியீடுகளில் கொலம்பியா ரேஸ் லா ஜர்னல், தி ஃபுனாம்புலிஸ்ட் மற்றும் பராபிராக்ஸிஸ் ஆகியவை அடங்கும். கதீஜாவின் ஆராய்ச்சி அமெரிக்க குடும்பக் காவல் துறை மற்றும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவின் தொழில்நுட்பத்திற்குள்ளான முன்கணிப்பு அபாய மாடலிங்கில் கவனம் செலுத்துகிறது.
முரளி சண்முகவேலன்
சாதிக் கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட முரளி சண்முகவேலன் சாதிக்கு எதிரான அறிஞர் ஆவார். அவருடைய ஆராய்ச்சியானது ஊடகங்களிலும் தகவல் தொடர்பு ஆய்வுகளிலும் டிஜிட்டல் கலாச்சாரத் தளங்களிலும் பொறுப்பேற்க மறுக்கப்படும், குறிப்பாக சாதிக் கொடுமைகள் போன்ற பாதுகாக்கப்பட்ட வகைகள் தொடர்பான சிக்கல்கள் பற்றியதாகும்.
மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவுகாலம் வருமா?
இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!