விமர்சனம் : விசித்திரன்!

entertainment

மலையாளத்தில் 2018ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஜோசப்’ படத்தின் தமிழ் வடிவம்தான் ‘விசித்திரன்’. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார்.

தமிழில் கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதா என புரியவில்லை. கடந்த வாரம் ஓடிடியில் வெளியான பயணிகள் கவனத்திற்கு, மலையாள படத்தின் மறுபதிப்பு. இன்று வெளியாகி இருக்கும் கூகுள் குட்டப்பா, விசித்திரன் இரண்டு படங்களும் மலையாள படங்களின் தமிழ் வடிவம் ஆகும்.

எந்த மொழியில் இருந்தும் படத்தை தமிழ் மொழியில் மறுபதிப்பு செய்கிற போது இங்குள்ள கலாச்சார, பண்பாடு சூழலுக்கு ஏற்ப திரைக்கதை வடிவம் மாற்றப்பட வேண்டும் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறதா என பார்க்கலாம். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் பாலாவின் பி.ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
தன் தனிப்பட்ட வாழ்வில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் விருப்ப ஓய்வுபெற்ற காவலர்
மாயன், முழு நேரம் மதுவில் மூழ்கியிருக்கிறார். அதே நேரம் குற்ற செயல்கள்
நடைபெறும் இடங்களில் குற்றவாளி யார் என்பதை கண்டறியும் தனித்தன்மை மிக்கவராக (ஆர்.கே.சுரேஷ்) இருப்பதால் காவல்துறை அவ்வப்போது இவரை பயன்படுத்திக்கொள்கிறது.

இத்தனை திறமையுள்ள காவலரின் முன்னாள் மனைவியும், மகளும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி சிகிச்சை பலன் தராமல் பலியாகின்றனர். இந்நிலையில் இந்த மரணங்கள் குறித்து எழும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விசாரணையில் இறங்கும் மாயனுக்கு மனைவி, மகள் இருவருமே திட்டமிட்டு விபத்தில் சிக்கவைக்கப்பட்டு, பின்னர் மூளைச்சாவு அடைந்தனர் என்கிற உண்மை தெரிகிறது. அதன் பின்னணி என்ன என்கிற ஆய்வில் மாயன் ஈடுபடுகிறபோது, இதன் பின்னால் மெடிக்கல் மாஃபியா கூட்டம்இருப்பது தெரிய வருகிறது.

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஒரு பெரிய மெடிக்கல் மாபியாவை பொது வெளியில் எப்படி அம்பலப்படுத்தினார். அதற்காக அவர் கொடுத்த விலை என்ன என்பதே விசித்திரனின் திரைக்கதை.

பொதுவாக ரீமேக் படங்கள் சொதப்பலாகவே வரும் என்ற எண்ணத்தை விசித்திரன் மாற்றியிருக்கிறது. ஜோஜூ ஜார்ஜ் மலையாளத்தில் கொடுத்த உயிரோட்டமான நடிப்பை முடிந்த மட்டும் ஆர்.கே.சுரேஷ் கொடுத்திருக்கிறார். நிதானமான காட்சிகள், பதற்றமில்லாத மனிதர்கள், குளுகுளு நில அமைப்புகள் என பார்க்கவே புதிய நிலப்பரப்பில் புதிய அனுபவமாக இத்திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு உண்மைக்கதை என்பதாலும் மலையாள சினிமாவின் தமிழ் வடிவம் அதே இயக்குநர் என்பதால் புதிதாக எதுவும் முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கென பாடல்களை சேர்த்து திருப்தியாகவே வழங்கியிருக்கிறார் இயக்குநர். வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு இதம்.

சில காட்சிகளே வந்தாலும் மது ஷாலினி மனதில் நிறைகிறார். படத்தின் மிகப்பெரும் பலவீனம் ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் ஏன் எப்போதும் ஸ்லோ ரேசுக்கு செல்பவர்கள் போன்று நடித்திருக்கிறார்கள், நடக்கிறார்கள் என்பதே. படம் ஒரு நிதானமான ட்ராமாதான் என்றாலும் மாயனாக நடித்திருக்கும் சுரேஷ் தவிர மற்றவர்களாவது கொஞ்சம் சுறுசுறுப்பாக நடித்திருக்கலாம்.

இளவரசு உள்ளிட்ட மாயனின் நண்பர்களின் கதாபாத்திர வடிவமைப்பு அருமை.
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத ஒன்று மருத்துவ உலகம். அந்த உலகம் பணத்துக்காக திட்டமிட்டு விபத்து நடத்தி தங்கள் வியாபாரத்தை திருட்டு தனமாக நடத்துகிறது என்பதை திரையில் காட்சிகளாக பார்க்கும் போது பார்வையாளனுக்குள் எந்த மருத்துவமனை, மருத்துவரை நம்பி வைத்தியம் பார்ப்பது என்கிற கேள்வி எழும்.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானத்தில் இத்தனை பெரிய திருட்டு வேலைகளை செய்ய முடியுமா என தெரியவரும் போது நமக்கு பொது சமூகத்தின் மீதும் மருத்துவ உலகின் மீதும் உச்சகட்ட கோபம் ஏற்படும்.

பணம் இருப்பவர்களுக்கே இவ்வுலகில் வாழும் அதிகாரம் இருப்பதாக உணர முடிகிறது. மருத்துவ மாஃபியா கதையை த்ரில்லர் கதையாக வழங்கியிருக்கிறார்கள். இது போன்ற திரைக்கதை அமைப்பில் நேரடி தமிழ் படங்கள் தமிழில் வந்திருந்தாலும் விசித்திரன் வேறு மாதிரியாக இருக்கிறது

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *