hவாலி ரீமேக்: எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி!

entertainment

1999ம் ஆண்டு அஜித், சிம்ரன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. இத்திரைப்படத்தின இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் பெற்றிருந்தார். ஆனால் வாலியின் இந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப்படத்தின் கதை, திரைக்கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்ற அடிப்படையில், வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்ய அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால், கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை எஸ் ஜே சூர்யா வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது அதன் தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக்கூறி, இந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனிகபூருக்கு அனுமதி அளித்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே.சூர்யா-வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கு தீர்ப்பை பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ் ஜே சூர்யா கோர முடியும் என்றும், தேவைப்பட்டால் இழப்பீடு உள்ளிட்டவை எல்லாம் சட்ட விதிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அரசியல் சாசன விதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம் , வேறு கருத்துகள் தீர்ப்பை ஆதிக்கம் செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

**- இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *