இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, அகமதாபாத்தில் உள்ள இன்று காலையில் பெயர் சூட்டப்பட்ட நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 24) பகல் 2.30 மணிக்குத் தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இன்று பேட்டிங் இறங்கியதில் இருந்தே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடியாமல் திணறியது. பகல் – இரவு ஆட்டத்துக்கான பிங்க் பால் அதிகமாக பவுன்ஸ் ஆனதால் பந்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் இங்கிலாந்து அணி திணறியது. இதைப் பயன்படுத்தி இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தது.
இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முதல் நாளே பிட்ச் இப்படி இருப்பதால் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது இன்னும் கடுமையாகத் திணறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-ராஜ்**�,