OTT படுபோர், மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள்: பி.சி. ஸ்ரீராம்

entertainment

ஒரு கட்டத்திற்குப் பிறகு, OTT உள்ளடக்கம் சலிப்பை ஏற்படுத்துகிறது. பல தொடர்கள் இருளும் வன்முறையும் நிறைந்த கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்” என ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக பல தசாப்தங்களாக வலம் வருபவர் பி.சி. ஸ்ரீராம். சினிமாவாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி தன் மனதிற்கு பட்டதை வெளிப்படையாகக் கூறுவதில் தயக்கம் காட்டாத ஆசிரியர் இவர். இந்த லாக்டவுன் காலத்தில் பி.சி. ஸ்ரீராமின் பொழுதுகள் எவ்வாறு நகர்கின்றன என தொடர்ந்து டிவிட்டர் வாயிலாகவும் ஆங்கில ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகிறார். அவ்வாறு சமீபத்தில் அவர் பகிர்ந்த அனுபவத்திலிருந்து சில முக்கியமான தருணங்கள்:

லாக்டவுன் காலம் குறித்து மனம் விட்டுப் பேசிய பி.சி. ஸ்ரீராம், “இந்த லாக்டவுன் நம் வாழ்வில் வெவ்வேறு வழிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, பலர் இப்போது தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து பேசத் தொடங்கியுள்ளனர். மற்றவர்களிடம் நான் பேசும் விதத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை நான் உணர்கிறேன். இச்சமயம், எனது பல பழைய நண்பர்களிடம் பேசினேன். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் குரல்களைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீண்ட காலமாக விட்டுப்போன எனது வாசிப்பு பழக்கத்தை புதுப்பித்துள்ளேன். எனது பழைய ஃபிலிம் நெகடிவ்கள் சுத்தம் செய்யப்படாமலேயே கிடந்தன. அவற்றை தற்போது சுத்தம் செய்து வருகிறேன். பலவற்றை டிஜிட்டல் ஆக்கும் முயற்சிகளை இத்தனை ஆண்டுகாலமும் செய்யாமலேயே இருந்துள்ளேன். துரதிருஷ்டவசமாக சிலது சேதமடைந்துள்ளது.

பலரைப் போலவே, நானும் நிறைய வெப்சீரிஸ்களையும் படங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு, OTT உள்ளடக்கம் சலிப்பை ஏற்படுத்துகிறது. பல தொடர்கள் இருளும் வன்முறையும் நிறைந்த கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்திய திரைப்படங்கள், சீரியல்களில் கண்ணீரை வலுக்கட்டாயமாக வரச்செய்யும் போக்கும், வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள மோசமான விஷயங்களும் மக்களை அடிமையாக்கும் வகையில் ஒன்றோடொன்று ஒத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். திரையரங்குகளில் பார்க்கும்போது திரைப்படங்கள் சிறப்பாக ரசிக்கப்படுகின்றன. இந்த நெருக்கடியை நாங்கள் சமாளிப்போம் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையும் கூட்டு நேர்மறையும் மட்டுமே இது போன்ற ஒரு நெருக்கடியை சமாளிக்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *