hவணிக வளாகமாக மாறிய சாந்தி திரையரங்கம்!

Published On:

| By Balaji

சென்னை, அண்ணா சாலையின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த சாந்தி திரையரங்கம் மூடப்பட்டிருந்த நிலையில், மறு சீரமைக்கப்பட்டு வணிக வளாகமாக ‘அக்‌ஷயா சாந்தி’ என்னும் பெயரில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

1961-ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் நிறுவப்பட்ட சாந்தி திரையரங்கம், சென்னைவாசிகளான பல திரை ரசிகர்களுக்கும் பிடித்தமான இடங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது. சென்னையின் முதல் ஏசி திரையரங்கம் என்ற பெருமைக்குரிய சாந்தி திரையரங்கம் நடிகர் சிவாஜியால் உருவாக்கப்பட்டது. அத்தகைய சிறப்புமிக்க சாந்தி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது.

திரைத்துறையில் தான் சம்பாதித்த பணம், திரைத்துறை சார்ந்தே பயன்பட வேண்டும் என்ற விருப்பத்தில் தனது மகள் பெயரில் இந்தத் திரையரங்கத்தை சிவாஜி நிறுவினார். 55 வருடங்களாக திரை ரசிகர்களுக்கு, குறைந்த டிக்கெட் விலையில் திரைப்படம் பார்க்க சாந்தி திரையரங்கம் உதவியாக இருந்தது. பொருளாதார நெருக்கடி, நிர்வாகப் பிரச்னைகளின் காரணமாகப் பல திரையரங்கங்கள் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவரும் நிலையில், சிவாஜியால் கட்டப்பட்ட சாந்தி திரையரங்கம் மூடப்பட்டது இந்தத் துறையின் எதிர்காலம் குறித்த கேள்வியை வைத்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட இந்த திரையரங்கம் மறு சீரமைக்கப்பட்டு நேற்று(மார்ச் 6) மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. ஆனால் திரையரங்கமாக இல்லாமல் வணிக வளாகமாக மட்டும் அக்‌ஷயா சாந்தி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர்கள் சிவகுமார், பிரபு, விஜயகுமார், சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் திறப்பு விழாவைத் தொடர்ந்து நடிகர் சிவாஜி கணேசனின் உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. அந்த சிலையை நடிகர் சிவகுமார் திறந்துவைத்ததுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

**இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share