Lவிஷாலை ஏமாற்றிய பெண் ஊழியர்!
‘சினிமாவில் விஷால் மூலம் மற்றவர்களுக்குப் பிரச்னை வரும். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வார் விஷால்’ என திரையுலகில் கூறப்படுவது உண்டு.
அப்படிப்பட்டவருக்கு பெண் ஒருவரால் சிக்கல் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இன்றைய பேசுபொருளாக உள்ளது. விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார் விஷால். விரைவில் வெளியாகவுள்ள ‘சக்ரா’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், 2015ஆம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிடிஎஸ் தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பணத்தைப் பரிமாற்றம் செய்து ரம்யா மோசடி செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விஷால் தயாரிப்பு நிறுவனத்திடம் டிடிஎஸ் தொகையினைக் கட்டிவிட்டதாகப் போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்துவிட்டதாகவும் அந்தப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அலுவலக இ-மெயில் முகவரி மற்றும் அலுவலக கணிப்பொறியில் உள்ள முக்கியமான ஃபைல்களை அழித்துவிட்டதாகவும், தினசரி வரவு-செலவு கணக்குகளிலும் ரம்யா முறைகேடு செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ரம்யா மோசடி செய்த தொகை சுமார் 45 இலட்ச ரூபாய் இருக்கும் எனவும், அதையும் தாண்டி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரம்யாவிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், ஜூன் 28ஆம் தேதி அனைத்து கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷாலை ஒரு பெண் ஏமாற்றியுள்ள நிகழ்வு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
**-இராமானுஜம்**�,