`ரோஜாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

Published On:

| By admin

குஷ்பு, ரோஜா ஆகிய இருவரும் 1990 – 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சமபல போட்டியாளராகக் கதாநாயகிகளாக ஆதிக்கம் செலுத்தியவர்கள்.
இவர்கள் இருவரும் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த நிலையில் வீரம் வெளஞ்ச மண்ணு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தபின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியுடன் ரோஜாவுக்குத் திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமா நடிகையாக இருந்தபோதும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். அதன் காரணமாகவும், சொந்த மாநிலமானதாலும் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்கியபின் அக்கட்சி சார்பில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வெற்றிபெற்று வந்தார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது ரோஜாவுக்கு, துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக நியமித்த அமைச்சர்களில் ரோஜாவையும் ஒரு அமைச்சராக்கி இருக்கிறார். இதையடுத்து ரோஜாவுக்குத் தமிழ் திரையுலகத்தில் இருந்து வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. நடிகை குஷ்பு, ‘ஆந்திரப்பிரதேச அமைச்சராகப் பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் சங்கச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், ‘எங்கள் தமிழ்நாட்டு மருமகள் ரோஜா செல்வமணி, ஆந்திர மாநிலத்தில் அமைச்சராகப் பதவியேற்பது பெருமைக்குரியது; வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

**இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share