தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உருவாகி வருகிறது. கர்ணன் என்ற தலைப்பு வைத்ததில் இருந்தே திரைப்படத்திற்கு பிரச்சினை ஆரம்பமானது. சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் தலைப்பை வைக்கக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
கர்ணன் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டுமென முக்குலத்து புலிப்படை அமைப்பின் அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 1991ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி கர்ணன் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற திரைப்படங்களால் தென்மாவட்டங்களில் மீண்டும் கலவர சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இது முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸின் அனுமதியின்றி அளிக்கப்பட்ட புகார் என விளக்கமும் அளிக்கப்பட்டது.
கர்ணன் திரைப்படம் தங்களது சமுதாயத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி தனுஷ், மாரி செல்வராஜுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான சமூக வலைதளப் பதிவுகளையும், டிக் டாக் வீடியோக்களையும் பார்க்க முடிந்தது.
**எதிர்ப்புக்கு காரணம் என்ன?**
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜும், அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷும் தங்களின் அடுத்த திரைப்படத்துக்காக ஒன்றிணைவதுதான்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரியாக சட்டக் கல்லூரிக்கு செல்லும் இளைஞனுக்கு, ஆதிக்க சாதியினரால் ஏற்படும் பிரச்சினைகள், அதனை எதிர்கொள்ளும் விதம், தென் மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் சாதி ஆணவக் கொலைகளை மையப்படுத்தியது பரியேறும் பெருமாள். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறனால் எடுக்கப்பட்ட ‘அசுரன்’ திரைப்படம் தென் மாவட்டங்களின் ஒடுக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதம், பஞ்சமி நில உரிமை மீட்பு பற்றி பேசியது. கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடியவர்கள் ஒரே குடிசையில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவூட்டியது.
ஆக, தனுஷ்-மாரி செல்வராஜ் இணையும் ‘கர்ணன்’ திரைப்படம் ஆதிக்க சாதி எதிர்ப்பைத்தான் முன்னிறுத்தும் என்று தென்மாவட்டங்களில் உள்ள உயர் சாதியினர் நினைத்துக்கொண்டதன் வெளிப்பாடுதான் மேற்குறிப்பிடும் எதிர்ப்புகளுக்கு காரணம்.
**கதைதான் என்ன?**
திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள ஒரு கிராம மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் உரிமைப் போராட்டங்களை சொல்வதுதான் கர்ணன் படத்தின் ஒன் லைன் என்கிறார்கள் படக்குழுவினர். கிராமத்தின் எல்லையோரம் இருக்கும் மரம்தான் அந்த ஊரின் பேருந்து நிறுத்தம். அவ்வழியாக செல்லும் பேருந்து ஒன்று மற்ற கிராமங்களில் நின்று மக்களை ஏற்றிச் சென்றாலும், குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் நிறுத்தாமல் செல்கிறார்கள்.
பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பேருந்து அங்கு நிறுத்தப்படவில்லை. இறுதியாக தனுஷ் போராட்டம் நடத்தி கிராம பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைப்பதுதான் கதை. இதில் சாதியைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை, அடிப்படை புரிதல் இல்லாமல் தனுஷ், மாரிசெல்வராஜ் இணையும் படம் என்கிற ஒரே காரணத்திற்காக எதிர்க்கிறார்கள் என்றும் படக்குழு தரப்பு சொல்கிறது.
**மின்னம்பலம் டீம்**�,