lஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்திய ஐதராபாத்!

entertainment

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (அக்டோபர் 27) நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணியைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், சஹா அரைசதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 47ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸுடன் விளையாடியது. ஐதராபாத் அணியில் மூன்று மாற்றமாக ஜானி பேர்ஸ்டோ, பிரியம் கார்க், கலீல் அகமது நீக்கப்பட்டு வில்லியம்சன், விருத்திமான் சஹா, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து கேப்டன் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் வார்னர் முதல் ஓவரில் இருந்தே மட்டையை எல்லா பக்கங்களிலும் சுழற்றினார். பந்துகளை எல்லைக்கோட்டுக்குப் பறக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்து அமர்க்களப்படுத்தினார். 25 பந்துகளில் தனது 47ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எடுத்தது. இதில் வார்னரின் பங்களிப்பு மட்டும் 54 ரன்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்-பிளேக்குள் அரைசதத்தை எட்டிய முதல் வீரரானார் வார்னர். அவருக்கு நேற்று 34ஆவது பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.

வார்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாகியது. அணியின் ஸ்கோர் 107 ரன்களை (9.4 ஓவர்) எட்டியபோது வார்னர் (66 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே வந்தார்.

வார்னருக்கு பிறகு ரன் விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்துகொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி பவுலர்களை மிரட்டினார். அக்‌ஷர் பட்டேல், ரபடாவின் ஓவர்களில் சாதாரணமாக சிக்சர் பறந்தன. சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 87 ரன்களில் (45 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் மனிஷ் பாண்டே ஸ்கோரை ஓரளவு நகர்த்தினார்.

20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மனிஷ் பாண்டே 44 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), வில்லியம்சன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில் நோர்டியா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 54 ரன்களை வழங்கினார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஐபிஎல்லில் 25 ஆட்டங்களுக்குப் பிறகு அதாவது 2017ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு முதன்முறையாக விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வெளியேறினார். இந்தச் சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீள முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்), ஹெட்மயரும் (16 ரன்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ரன்களும், ரஹானே 26 ரன்களும் எடுத்தனர்.

முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

12ஆவது ஆட்டத்தில் ஆடி ஐந்தாவது வெற்றியை ருசித்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தனது கடைசி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஐதபாராத் பிளே-ஆப்புக்குள் நுழையும்.

அதேநேரம் 12ஆவது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருப்பதால் இப்போது டெல்லி நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *