�
நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1) அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரே நாளில் நடிகர் சிவாஜி கணேசன், அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக வசனத்தை உள்வாங்கி சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தை நேரில் கண்டு ரசித்து வியந்த தந்தை பெரியார் அவரை வெகுவாக பாராட்டியதுடன் கணேசன் என்கிற பெயருக்கு முன் சிவாஜி என்கிற அடைமொழியை வழங்கினார்.
பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரையுலகுக்குள் நுழைந்த அவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், 9 தெலுங்கு படம், இரண்டு இந்தி படம், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான சிவாஜி கணேசன், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதா சாகேப் பால்கே விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று, அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில், உலகளவில் தேடுபொறியில் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், தனது இணையப்பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கு டூடுல் வெளியிட்டுள்ளது.
நுபுர் ராஜேஷ் சோக்சி என்பவர் வடிவமைத்த இந்த டூடுலை திரையுலகினர் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.
**-இராமானுஜம்**
�,