|இளையராஜாவின் 44 வருட பந்தம்: இரண்டு வார அவகாசம்!

Published On:

| By Balaji

‘பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்ற தடை விதிக்கவேண்டும்’ என்று கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘இசைஞானி’ என்ற பெயரை சம்பாதித்து, தனது இசையால் அனைவரையும் ரசிக்கவைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1976-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்த அவரது அடையாளங்களில் ஒன்றாக பிரசாத் ஸ்டுடியோ திகழ்ந்துவந்தது. அவரது இசையை கெளரவிக்கும் விதமாக இளையராஜாவிற்கு தனி இடத்தை அமைத்துக் கொடுத்து பிரசாத் ஸ்டுடியோ சிறப்பு செய்தது.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தன் இசைப்பணிகளுக்காக இளையராஜா பயன்படுத்திவந்தார். பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வகித்து வரும் சூழலில் அந்த கட்டிடம் தொடர்பாக இளையராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இளையராஜா பயன்படுத்திவந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் கூறப்பட்டது. இந்த பிரச்னைகளைத் தொடர்ந்து இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பல்வேறு திரைத்துறையினரும் இளையராஜாவிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். 44 வருடங்களுக்கும் மேலாக தான் இசைப்பணிகள் மேற்கொண்டு வரும் அந்த இடத்தில் இருந்து தன்னை வெளியேற்றக் கூடாது என்றும், வாடகை தரத் தான் தயாராக இருப்பதாகவும் இளையராஜா தரப்பில் கூறப்பட்டது. இட உரிமை தொடர்பான இந்த வழக்கு 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று(பிப்ரவரி 28) நடைபெற்ற நிலையில், ‘பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share