திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உட்பட நான்கு தயாரிப்பாளர்கள் நடிகர் சிம்புவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வேண்டுமென்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாகப் பேசி இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என சிம்புவை தயாரிப்பாளர்கள் சங்கம் அழைத்திருந்தது. சிம்பு சார்பில் அவரது அம்மா உஷா ராஜேந்தர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். வழக்கம் போல சிம்புவிடம் கேட்டு சொல்கிறேன் என பதில் கூறியிருக்கின்றார்
இதனால், ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கூறிய அடிப்படையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த சிம்பு படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை மீறி படப்பிடிப்பில் கலந்து கொண்டது தொழிலாளர் சம்மேளனம் என்கின்ற குற்றசாட்டை கூறியது தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர்கள் சங்கம், இனிமேல் தொழிலாளர் சம்மேளனத்துடன் எவ்வித உடன்பாடும் ஒப்பந்தமும் கிடையாது, அவரவர் தங்கள் வசதிக்கேற்ப படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.இந்த அறிவிப்பு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது..
இது தொடர்பாக திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் உள்ள ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம் எடுத்ததாக பத்திரிகைகளில் அறிவித்துள்ளார்கள்.
இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் முறைப்படி அனுப்பவில்லை.
சம்மேளனத்தின் தலைவராகிய நான் தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும்.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள அனைவரையும் விட தயாரிப்பாளர் நலனுக்காக நாங்கள் பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்.
இது படமெடுக்கின்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக உள்ள முரளி எங்கள் இனிய நண்பர். மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர் இராமநாராயணனின் புதல்வர் ஆவார். அவர் மீது உள்ள மரியாதையில் நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை.
இருப்பினும் நடந்த விசயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நடிகர் சிம்பு சம்பந்தப்பட்டு 4 தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இருப்பதால் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தை கேட்டுக் கொண்டது. சம்மேளனமும் அதன்படியே நடந்து வந்தது.
இதற்கிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வெளியூரில் படப்பிடிப்பு நடத்திக் கொள்கிறோம் என்றும், மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுவதற்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசிச் சரி செய்த பிறகே சென்னையில் படப்பிடிப்பைத் துவங்குவோம் என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஐசரி கணேசனின் கோரிக்கையை சம்மேளனம் தெரிவித்தது.
தயாரிப்பாளர்கள் சங்கமும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும் அப்படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். இதில் சம்மேளனத்தின் தவறு ஏதும் இல்லை.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கே.செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் மீறவில்லை.
ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நியாயத்திற்கு புறம்பாக எங்கள் சம்மேளன தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் முறையிட்டு தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமுகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம் என்பதை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
“ஏற்கனவே சில சமரச உடன்படிக்கைகளுக்கு உட்பட்டே முதல்கட்ட படப்பிடிப்புக்கு அனுமதித்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு செல்லும் முன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும், என்பதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்காததை போன்று பெப்சி அமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்ய போவதில்லை தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது பெப்சி தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர்களுக்கு பாக்கி வைத்திருப்பது சிலம்பரசன். அவர் நடிக்கும் படங்களை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டால் அவர் மட்டுமே பாதிக்கப்படுவார்.
அதனை செய்யாமல் 24,000ம் தொழிலாளர்களை ஒருவரிடம் கடனை வசூலிக்க பலிகடாவாக்குவது எந்த வகையில் நியாயம். சிலம்பரசன் என்கிற நடிகருக்கு எதிராக
நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பயப்படுகிறதா என தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தயாரிப்பாளர்கள் சங்கம்- தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்தை தனிப்பட்ட ஒரு நடிகர் கடந்த நான்கு வருட காலமாக மோத விட்டு தன் நடிப்புத் தொழில் மூலம் சம்பாதித்து வருகிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லாததால் சிலம்பரசன் போன்ற நடிகர்கள் திரைப்பட தொழிலில் தயாரிப்பாளர்களுக்கும் – தொழிலாளர்களுக்கும் இடையில் மோதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.
**-இராமானுஜம்**
�,”