சர்ச்சைக்குள்ளான நாசர் அறிக்கை!

entertainment

தமிழ்மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாவிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை செளகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படி நடித்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரைப்பட துறைசார்ந்த எந்தவொரு சங்கமும் இதுவரை அவரை வாழ்த்தியோ அல்லது மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கவோ இல்லை.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருதை செளவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவித்தற்கு நன்றி சொல்லும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சௌவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா..அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள். ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி. ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம், கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு. அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும். தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம்முத்துமாலைக்கு பதக்கமாய் ‘பத்மஶ்ரீ’ உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். ‘பத்மஶ்ரீ’ விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்”என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மட்டுமே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என குறிப்பிட்டு வருகின்ற சூழலில் நடிகர் நாசர் ஒன்றிய அரசு என்கிற வார்த்தையை பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *