பூ ராமுவை நினைவுகூரும் பிரபலங்கள்!

entertainment

தமிழ் சினிமாவின் யதார்த்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ‘பூ’ ராமு, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் 27.06.2022 அன்று மாலை காலமானார்.

தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வலிமையானவை. பூ ராமு, பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களில் காலம் கடந்து ஆட்சி செய்து வருபவை. அதனால்தான் ஒரு பிரபல நடிகருக்கு இணையாக, அரசியல்வாதிக்கு சமமாக சமூகவலைதளங்களில் அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினராலும் புகழஞ்சலி பதிவுகள் பொங்கி வழிந்தது .

ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார் என்று அவரது மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்ட புகழஞ்சலிக் குறிப்பில்
”மாணவப் பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொது வாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதிவரை இடதுசாரியாக வாழ்வை மேற்கொண்டவர். சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும் விதமாக தன் பெற்றோரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டியமைக்கவும், அப்பகுதியின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவமைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர்.

”கனவுகள் 2000” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர்.
1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சென்னை கலைக்குழுவில் இணைந்திருந்த ராமு அக்குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம்பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார்.

குறிப்பாக, பயணம் நாடகத்தில் அவர் ஏற்று நடித்த ”நகரதேவன்” பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி ‘பூ ராமு’வாகியவர். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘நெடுநல்வாடை’ உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர்.

‘ஆட்டோ’ ராமு, ‘பூ’ ராமு, ‘கருப்பு’ ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப் பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தன் வாழ் நாளை மக்களுக்காக மட்டுமே அர்ப்பணித்த மகா கலைஞன் எங்கள் தோழன் பூ ராமு. இப்படி ஒரு இடிச் செய்தி என் இதயத்தில் இறங்குமென நினைக்கவில்லை. எத்தனை கூட்டங்களில் எத்தனை போராட்டங்களில் ஒன்றாய் பயணித்திருக்கிறோம். ஒருவன் சாவது சகசமானது தான். ஆனால் ஒரு தோழன் சாவது என்பது ஒரு ஊர் சாவதற்குச் சமமானது. எண்ணற்ற நாடகங்களில் நடித்து மக்களுக்கு சேதி சொன்னவர். தனது எதார்த்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்து நின்றவர். நான் எழுதுவதா அழுவதா.. புதிய இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “கிடா” எனும் திரைப்படத்தில் தோழர் ராமு தான் கதை நாயகன். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருக்கிறேன். படத்தை பாராமல் போய் விட்டாயே தோழா.. அண்ணன் இயக்குநர் சீனு ராமசாமியின் “இடம் பொருள் ஏவல்” படத்தில் சிவப்புச் சட்டை மாரியப்பனாக வருவாயாமே.. இப்படி எத்தனை உன் படங்களை இனி நீயின்றி நாங்கள் பார்த்தழுவது. ஆனால் ஒன்று நீ சுதந்திரமாக வாழ்ந்தாய் சுதந்திரம் இல்லாதவர்களுக்காக வாழ்ந்தாய்.. போய் வா நதியலையே!” – மீளா துயருடன் என கூறியுள்ளார் கவிஞர் ஏகாதசி.

“நீர்ப்பறவை மீனவா
இடம் பொருள் ஏவல்
சிகப்புத் துண்டு மாரியப்பா
கண்ணே கலைமானே விவசாயி
இனி நான் காண வைத்திருக்கும் பாத்திரங்கள் எப்படி நிறையும்?
My Darling
Pretty young old man
Comrade..
Ramu love you” என இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“தோழர் என்றழைத்தபோது ‘தோழா’ என்றழைக்கச் சொன்னது முதல் எண்ணிலடங்கா எண்ணங்களையும், அனுபவங்களையும், தந்ததோடன்றி அண்ணனாய், தந்தையாய், தோழனாய் அளவளாவி, வாதித்து, விவாதித்து, உன்னோடு இருந்த நாட்களை பொட்டலம் கட்டி வைத்துக்கொள்வேன். ஆனால் இனிமேல் எப்படி உனை அழைப்பேன் ‘தோழா'” என பதிவு செய்துள்ளார் நடிகர் காளி வெங்கட்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *