ஐபிஎல்: டெல்லியின் பிளே ஆப் கனவைத் தகர்த்த மும்பை!

entertainment

2022 ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்று (மே 21) நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதேவேளை இந்தப் போட்டியில் டெல்லி தோல்வியடைந்து விட்டால் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து சூழ்நிலை இருந்ததால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 48 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான டிவால்ட் ப்ரிவிஸ் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிடியாக ஆடிய டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை 19.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் டெல்லியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இந்த நிலையில், தோல்வி குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “வெற்றி கைநழுவி சென்றது மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளது. அதேவேளை டெல்லியின் கேப்டனுக்கு ரிஷப் பண்ட் சரியானவர்தான். கடந்த ஆண்டு ஷ்ரேயஸ் அய்யர் காயத்தால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின் ரிஷிப் பண்ட் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ரிஷப் பண்ட் இன்னும் இளைய நபர் தான். கேப்டன்சி குறித்து அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார்.
டி20 அணியில் கேப்டனாக இருப்பது, குறிப்பாக அதிக அழுத்தம் கொண்ட தொடரான ஐபிஎல்லில் கேப்டனாக இருப்பது சாதாரண விஷயமல்ல. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படும். கேப்டனாக ரிஷப் பண்டுக்கு எனது முழு ஆதரவு உண்டு” என்றார்.
பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில், இன்று (மே 22) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன, இது ஒரு சம்பிரதாயமான ஆட்டமாகவே இருக்கும்.

**-ராஜ்-**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *