”புஜ்ஜி” “நேத்து” பாடல்கள் படத்தில் இல்லை: காரணம் என்ன?

Published On:

| By Balaji

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தைத் தொடர்ந்து, தனுஷூக்கு இந்த வருடத்திய அடுத்த ரிலீஸ் `ஜெகமே தந்திரம்`.

திரையரங்க ரிலீஸூக்காகத் தயாரான இந்தப் படம், கொரோனா காரணமாக திரையரங்க வெளியீடு இயலாத காரணத்தால், நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வருகிற ஜூன் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷூடன் ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ஏற்கெனவே, ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து பாடல்களின் வீடியோ வெளியாகி செம ஹிட்.

புதுத்தகவல் என்னவென்றால், ரசிகர்கள் ரசித்து கொண்டாடிய புஜ்ஜி, நேத்து பாடல்கள் படத்தில் இடம்பெறாதாம். சமீபத்தில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜெகமே தந்திரம் திரைப்படம் பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, ”புஜ்ஜி” மற்றும் ”நேத்து” பாடல்கள் படத்தில் இடம் பெறாது என்றும், ப்ரமோஷனுக்காக தான் அந்தப்பாடல்கள் முன்கூட்டியே வெளியானதாகவும் சொல்லியிருக்கிறார்.

சென்சாரில் யு/ஏ சான்றிதழுடன் படம் தயாராகியிருக்கிறது. படத்தின் ரன்னிங் நேரத்தை மனதில் கொண்டே படத்தில் பாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். கூடுதலாக, தமிழ் மட்டுமின்றி, இந்திய மொழிகளில் டப் செய்து வெளியாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் டப்பாகி வெளியாக இருக்கிற காரணத்தால் படத்தின் வேகத்துக்கு பாடல்கள் இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதாலும் பாடல்கள் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share