30 Years of Magalir mattum movie

பெண்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்திய ’மகளிர் மட்டும்’!

சினிமா சிறப்புக் கட்டுரை

திரையுலக வரலாற்றில் சில படங்கள் காலத்தால் அழியா இடத்தைப் பிடிக்கும். அவற்றில் பேசப்படும் பிரச்சனைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கும். ஒவ்வொரு மொழியிலும் அப்படி ரசிகர்களால் போற்றப்படும் சில படங்கள் நல்ல பொழுதுபோக்கையும் தருவதாக அமையும். அந்த வரிசையில் இடம்பெறத்தக்கது சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய ‘மகளிர் மட்டும்’. கமல்ஹாசன் இப்படத்துக்கான கதை எழுதித் தயாரித்ததோடு, இறுதிக்காட்சியில் கௌரவமாகவும் தலை காட்டியிருந்தார். ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர், சத்யா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு மறைந்த கிரேஸி மோகன் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். 30 Years of Magalir mattum movie

மீடூ பிரச்சனை குறித்த விவாதம் பூதாகரமானபோது, எந்த அளவுக்குப் பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக விசாகா நெறிமுறைகள் முன்னிறுத்தப்பட்டனவோ, அதே அளவுக்கு ‘மகளிர் மட்டும்’ திரைப்படமும் மேற்கோள் காட்டப்பட்டது. அப்படம் வெளியாகி, இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2017 இல் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில்  வெளியான ‘மகளிர் மட்டும்’ படமும் கூட, பெண்கள் முன்னேற்றம், அதிகாரமளித்தலை வேறொரு திரைக்கதை ‘ட்ரீட்மெண்டில்’ பேசியது. அந்த வகையில், அதற்கான முன்னோடி என்று கூட இப்படத்தைக் கருதலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்!

திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ’பெண் வேலைக்குச் செல்கிறாரா’ என்று கேட்கும் வழக்கம் இன்று பரவலாகிவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன் அப்படியொரு நிலைமை இல்லை. ஆனால், எந்தக் காலகட்டமாக இருந்தாலும் பொதுவிடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. குறிப்பாக, பாலியல்ரீதியிலான அத்துமீறல்களை ஏதேனும் ஒரு வடிவில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இன்றும் உயிர்ப்போடிருக்கிறது. அதுவே, ‘மகளிர் மட்டும்’ கதையை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக்குகிறது.

பல பெண்களும் சில ஆண்களும் பணியாற்றும் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனம். அதன் மேலாளர் ஜி.கே.பாண்டியன் (நாசர்) கறார் பேர்வழி போன்று தோற்றமளித்தாலும், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களிடம் பாலியில்ரீதியில் அத்துமீறத் துடிப்பவர். இது அங்குள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இந்த நிலையில், அந்த அலுவலகத்திற்குக் கணினி வடிவமைப்பாளராக நியமிக்கப்படுகிறார் சத்யா (ரேவதி). அவரோடு பாண்டியன் சகஜமாகப் பழகுவது, இதர பணியாளர்களை அவரிடம் இருந்து தள்ளி நிற்கச் செய்கிறது.

ஆனாலும், சில நாட்களில் பாண்டியனின் எண்ணமறிந்து அவர் விலகத் தொடங்குகிறார். அப்போது, சத்யாவுக்கு இரண்டு பெண்கள் நெருக்கமாகின்றனர். ஒருவர், தூய்மைப் பணியாளரான பாப்பம்மா (ரோகிணி). இன்னொருவர், மேலாளரின் உதவியாளரான ஜானகி (ஊர்வசி).

ஒருநாள் பணி நேரம் முடிந்து அலுவலகத்தில் அனைவரும் வீட்டுக்குக் கிளம்புகின்றனர். ஜானகியை மட்டும் ‘வேலை இருக்கிறது’ என்று காத்திருக்கச் சொல்கிறார் பாண்டியன். அவர் பயந்து நடுங்க, ‘நான் துணைக்கு இருக்கிறேன்’ என்று சத்யா ஆறுதலளிக்கிறார். அப்போது, ‘காபி கொடுத்துவிட்டு குடோன் போய்ட்டு வாங்க’ என்று ஜானகியிடம் சொல்கிறார் பாண்டியன்.

காபியில் சர்க்கரைக்குப் பதிலாக எலிமருந்தைத் தவறுதலாகக் கலந்து பாண்டியனுக்குக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறார் ஜானகி. அவர் திரும்பி வரும்போது, அறையில் மயக்கமடைந்து கிடந்த பாண்டியனை மருத்துவமனைக்குச் சத்யா அழைத்துச் சென்றது தெரிய வருகிறது. ஆனால், அவர் அந்த காபியைக் குடிக்கவில்லை.

அலுவலகம் திரும்பும் ஜானகி, சர்க்கரைக்குப் பதிலாக எலிமருந்தைக் கலந்து கொடுத்ததை அறிந்ததும் அதிர்ச்சியடைகிறார். அந்த விஷயம் பாப்பம்மாவுக்கும் சத்யாவுக்கும் தெரிகிறது. பாண்டியன் இறந்துவிட்டார் என்று கருதி, மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த அறைக்குச் செல்கின்றனர். மூடிய நிலையில் இருக்கும் ஒரு பிணத்தைக் கடத்திக்கொண்டு வெளியேறுகின்றனர்.

அதேநேரத்தில், சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறார் பாண்டியன். தாங்கள் கொண்டுவந்தது பாண்டியனின் சடலம் அல்ல என்று தெரிந்ததும், அதனை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மூவரும் முடிவு செய்கின்றனர். அடுத்த நாள் காலையில், வழியில் ஏற்படும் கலாட்டாவினால் அந்தப் பிணம் போலீசார் கைக்குத் திரும்பவும் கிடைக்கிறது.

அன்று, மீண்டும் அலுவலகத்திற்கு வரும் பாண்டியனைப் பார்த்து மூன்று பெண்களும் அதிர்ச்சியடைகின்றனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றறியும் மாதவி (’பசி’ சத்யா), அதனைப் பாண்டியனிடம் புட்டுப் புட்டு வைக்கிறார்.

தனது தலைக்குப் பின்னே இப்படியொரு விஷயம் நடந்தது தெரிந்ததும், அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணுகிறார் பாண்டியன். பாப்பம்மா, ஜானகி, சத்யா மூவரையும் நிறுவனத்துக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு வருமாறு மிரட்டுகிறார்.

அதன்பிறகு என்னவானது? பாண்டியனின் பாலியல் ரீதியிலான மிரட்டலுக்கு அவர்கள் பணிந்தார்களா இல்லையா என்று சொல்கிறது இப்படம்.

30 Years of Magalir mattum movie

தடைகளைக் கடந்து வரவேற்பு!

1992ஆம் ஆண்டு தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு, அதன்பின் ஏற்பட்ட சில காலதாமதங்களால் இப்படம் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானது. கதாநாயகன் இல்லை, காதல் போன்ற அம்சங்கள் இல்லை, பெரிதாக செண்டிமெண்ட் இல்லை, வேப்பிலையை ஏந்திக்கொண்டு ஆட்டம் யாரும் ஆடவில்லை என்பது உட்படத் திரையுலக வர்த்தகத்தின் நாடி தெரிந்தவர்கள் சொன்ன அத்தனை இலக்கணங்களையும் ‘மகளிர் மட்டும்’ மீறியிருந்தது. அதனால், இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் சொந்தமாக வெளியிட்டார் கமல்ஹாசன். பெரிய லாபத்தை ஈட்டினார்.

தடைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்ற ‘மகளிர் மட்டும்’, அதன்பின்னர் தெலுங்கிலும் மலையாளத்திலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது. ‘லேடீஸ் ஒன்லி’ என்ற பெயரில் தயாரான இந்திப்பதிப்பு 1997ஆம் ஆண்டே நிறைவுற்றாலும், இப்போதுவரை அது வெளியாகவில்லை.

பாடல் காட்சிகள் மற்றும் உள்ளரங்கப் படப்பிடிப்பு காட்சிகளுக்காக, இப்படத்தில் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு பெரிதாகப் பாராட்டப்பட்டது. அதுபோல, என்.பி.சதீஷின் படத்தொகுப்பும், மகியின் கலை வடிவமைப்பும் பெரிதாகச் சிலாகிக்கப்பட்டன. இளையராஜாவின் இசையும் இப்படம் பெற்ற பெருவெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்.

முரட்டு வில்லனாகவே நடித்துவந்த நாசரைச் சற்றே நகைச்சுவை கலந்த வில்லத்தனமான பாத்திரத்திற்கு சிபாரிசு செய்தவர் கமல். ஊர்வசியோடு நெருங்கிய நட்புள்ளவர் என்ற அடிப்படையில் ரேவதியும், பின்னர் ரோகிணியும் இதில் இடம்பெற்றனர்.

30 Years of Magalir mattum movie

இந்த படத்தில் ரேவதி, ஊர்வசிக்கு இணையாக ரோகிணியும் நடிப்பில் கலக்கியிருப்பார். ஒரு பாடல் காட்சியில் ஊர்வசி கன்னத்தில் செல்லமாகக் குத்துவதை எதிர்பாராமல் வாங்கிக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்பும் பாவனையை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஊர்வசி பாத்திரத்திற்குத்தான் ‘கைத்தட்டல்கள்’ அதிகம் கிடைக்கும் என்று தெரிந்தும், தனது பாத்திரத்திற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்றிருந்த அவரது நம்பிக்கையைத் தனியே பாராட்ட வேண்டும்.

இதில் சயனைடு தின்று இறந்தவராக நாகேஷ் பாத்திரம் காட்டப்படும். அக்காட்சி முழுக்க சிரித்த பாவனையுடன் அவர் தோன்றியிருப்பார். அவரை வைத்து எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியும் கூட நம்பகத்தன்மையுடன் இருக்கும். அதுவே, முதல் பாதியை எளிதாக நம் மனதில் ஒட்ட வைத்தது.

இதன் இரண்டாம் பாதியிலோ, நிறைய லாஜிக் மீறல்கள் உண்டு. குறிப்பாக, கிளைமேக்ஸ் சேஸிங் காட்சியில் நாசரையும் சத்யாவையும் தாண்டிக்கொண்டு மூன்று நாயகிகளின் கார் பறக்கும். ஆனால், அதற்கடுத்த வளைவிலேயே அவர்களது காரை நாசரும் சத்யாவும் கீழே சாய்ப்பார்கள்.

அதையெல்லாம் விட, பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படத்தில் ஒரு லாரி டிரைவரை ரோகிணி பாத்திரம் தனது அழகைக் காட்டி மயக்குவதாக ஒரு அபத்தக் காட்சியும் உண்டு. கிளைமேக்ஸில் தன் மனதுக்குப் பிடித்த ஆண் உருவம் முதலாளியாக வரும் கமல்ஹாசனுடைய தோற்றத்துடன் பொருந்திப் போக, இரு தோழி பாத்திரங்களும் ‘நீங்க இவரையே கல்யாணம் பண்ணுங்க’ என்று அவர் மீது தள்ளிவிடுவதாகப் படம் முடிவடையும். ’ரசிகர்களுக்காகப் புகுத்தப்பட்டவை’ என்று அது போன்ற அபத்தங்கள் அக்காலத்தில் நியாயப்படுத்தப்பட்டன. இன்று இப்படம் எடுக்கப்பட்டால், அது போன்ற விஷயங்கள் நிச்சயமாகத் தேவைப்படாது.

30 Years of Magalir mattum movie

இன்றும் ரசிக்கத்தக்கது!

‘மகளிர் மட்டும்’ படத்தை இன்றும் நாம் ரசிக்க முடியும். படத்தில் பிரமாண்டம் தென்படாவிட்டாலும், திரையில் சுவாரஸ்யத்திற்குக் குறைவு இருக்காது. காரணம், சாதாரண மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெண்களின் தினசரிப் பிரச்சனைகளோடு இப்படத்தின் காட்சிகள் பொருந்திப் போவதுதான். அதனாலேயே, பல காட்சிகளில் கிரேஸி மோகனின் பங்களிப்பைச் சிலாகிக்க வேண்டியிருக்கிறது. இன்றும் இதனை ரசிக்க வைக்கிறது.

அதேநேரத்தில், இன்றும் பெண்கள் இப்படத்தில் காட்டப்பட்ட பிரச்சனைகளை, அத்துமீறல்களைப் பணியிடங்களில் எதிர்கொள்கின்றனர் எனும்போது, பிரச்சனைகளின் வேர் முற்றிலுமாக அறுபடவில்லை என்ற எண்ணமும் தலைதூக்குகிறது.

அதையும் தாண்டி, சமூகக் குளத்தில் கல்லெறிந்த வகையில் தனித்துவம் பெறுகிறது இந்த ‘மகளிர் மட்டும்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

நாகை, திருச்சி உள்பட 6 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை : நீதிமன்றம் சென்ற 5 வயது சிறுவன்!

30 Years of Magalir mattum movie

+1
1
+1
1
+1
1
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *