5-year-old boy went to court

பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை : நீதிமன்றம் சென்ற 5 வயது சிறுவன்!

இந்தியா

5-year-old boy went to court

தனது பள்ளிக்கு அருகில் உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி 5 வயது சிறுவன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆசாத் நகரில்சேத் எம்ஆர் ஜெயபுரியா பள்ளி இயங்கி வருகிறது. அங்கு மழலையர் பள்ளி முதல் 9-ம் வகுப்பு வரை என மொத்தம் 475 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தநிலையில் பள்ளிக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடையால் பள்ளி மாணவர்களும், பெற்றோரும் தொந்தரவுக்கு உள்ளாவது வாடிக்கையாகி உள்ளது.

மதுபானக் கடையால் தினமும் பிரச்சனை அதிகரித்து வருவதை அங்கு படித்து வரும் அதர்வ் என்ற 5 வயது சிறுவன், தனது தந்தை பிரசூன் தீட்சித்திடம் மழலை மொழியில் கூறியுள்ளான்.

இதுதொடர்பாக மாநில அரசிடம் புகார் அளித்தும் மாற்றம் ஏற்படாத நிலையில், அதர்வ் பெயரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதுபானக் கடைக்கு எதிராக பிரசூன் தீட்சித் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “எனது பள்ளிக்கு அருகில் உள்ள மதுபானக் கடையில் குடிக்கும் சமூக விரோதிகள் தினமும் எங்கள் பள்ளியை சுற்றி வருகிறார்கள். அவர்கள் தகாத மொழியில் பேசுகிறார்கள்.

இதனால் என்னுடன் படிக்கும்  சக பள்ளி மாணவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபானக்கடையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற அமர்வு முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் தந்தை ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் புகார்களைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த அமைப்பில் (ஐஜிஆர்எஸ் போர்டல்) மதுபானக் கடை குறித்து புகார் அளித்திருந்தார்.

அதற்கு ‘பள்ளி வளாகத்தில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் கடை இருப்பதாகவும், பள்ளி 2019ஆம் ஆண்டில் மட்டுமே நிறுவப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக மதுபானக் கடை இயங்கி வருவதாகவும் கலால் துறை சார்பில் அலட்சியமாக பதில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிறுவப்பட்ட பிறகு நடந்த மதுபானக் கடையின் உரிமம் புதுப்பித்தல் சட்டவிரோதமானது” என்று அவர் வாதிட்டார்.

இதனையடுத்து ”பள்ளிக் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், மதுபானக் கடை உரிமத்தை புதுப்பிக்க எப்படி அனுமதி அளித்தீர்கள்?” என்று கலால் துறை அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் “வழிபாட்டுத் தலம், பள்ளி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் 100 மீட்டர் சுற்றளவில் எந்த மதுபானக் கடையும் இயங்கக் கூடாது” என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்ற அமர்வு வழக்கினை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை: ஸ்டாலின்

கலைஞர் நினைவிடம் திறப்பு: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!

5-year-old boy went to court

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை : நீதிமன்றம் சென்ற 5 வயது சிறுவன்!

  1. தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளே, இதுக்கு உங்க பதில்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *