வட இந்தியாவும் தமிழ்நாடும்: சில வரலாற்றுக் குறிப்புகள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

– ரவிக்குமார்

வட இந்தியாவும் தமிழ்நாடும் பண்புரீதியாக வேறுபட்ட அம்சங்கள் கொண்ட பகுதிகளாக உள்ளன என்ற கூற்று இப்போது ராகுல் காந்தி முதலான அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.

“நீங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது” என அவர் நாடாளுமன்றத்தில் பிரதமரைப் பார்த்துப் பேசியதையொட்டித் தமிழ்நாட்டின் தனித்துவம் குறித்து மீண்டும் இப்போது பலர் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவம் என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது ஆழமான வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், அந்தத் தனித்துவம் இப்போதைய இந்துத்துவ அரசியலைத் தடுத்து நிறுத்தும் வலிமை கொண்டதா? என்பது ஆய்வுக்குரியதாகும்.

தமிழ்ச் சமூகம் குறித்து ஆய்வு செய்த பலரும் இதன் பிரத்யேகமான பண்புகளை அடையாளம் கண்டுள்ளனர். வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்னின் (Burton Stein) கருத்துகள் அதில் முக்கியமானவை .

வடஇந்திய அரசுகளுக்கும் தென்னிந்திய அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடு இந்த இரு பிரதேசங்களின் சமூக கீழ்க்கட்டுமானங்களிலிருந்து தோன்றியது’ எனக் குறிப்பிடும் அவர், ‘வட இந்தியச் சமூகங்கள் ஒருமைத்தன்மை கொண்ட அலகுகளைக் கொண்டவையாகவும் தென்னிந்தியச் சமூகங்கள் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டவையாகவும் இருந்தன’ என்கிறார்.

மௌரியர்கள் கர்நாடகத்துக்குள் வணிகம் செய்ய நுழைந்ததும் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு தென்னக அரசுகள் உருவாயின. பிராமணியத்தின் மேலாதிக்கம் இந்த இரு சமூகங்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் இந்தத் துணைக்கண்டத்தில் மேலாதிக்கம் பெற்றுத் திகழ்ந்த பௌத்த சமண சமயங்களை அது வெற்றி கொண்டவிதம் இந்தச் சமூகங்களில் வேறுபடுகிறது. வடமேற்குப் பிராந்தியங்களில் நடந்த ஹுணர்களின் படையெடுப்பும், புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் கூறி இந்துக்கள் உள்வாங்கியதும் வடக்கில் பிராமணிய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க உதவின என்றால் தென்னகத்திலோ இதற்கு நேர்மாறாக, பௌத்த, சமண பக்தர்களைக் கடுமையாக ஒடுக்கியதன் மூலம் சைவம் மேலோங்கியது.

 

வாணிபமும் சமூகங்களும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்று பார்ப்பதன் மூலம் இந்த வேறுபாட்டுக்கான காரணத்தை அறியலாம். பௌத்தமும் சமணமும் வணிகப் பிரிவினரின் கருத்தியல் சாதனங்களாகும். கர்நாடகாவில் சமணம் அரச ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தது. மகத, மௌரிய அரசர்கள் கங்கைச் சமவெளியிலிருந்து கர்நாடகம்வரை வணிக உறவு கொண்டிருந்தனர். கர்நாடகப் பண்பாட்டில் சமணர்கள் தமது வணிகக் கருத்தியலின் வாயிலாகத் தனி இடம்பெற்றிருந்தனர். பல்லவ, பாண்டிய அரசுகளின் மையமாக சிவ, விஷ்ணு வழிபாடு இருந்தது. பக்தி சார்ந்த இந்து மதம் இவ்விரு அரசுகளின் மையமாக கருத்தியல் கூறாக ஆக்கப்பட்டது. பௌத்தமும், சமணமும் வணிகத்தின் கருத்தியல் என்றால், பக்தியின் முக்கியக் கூறாக “இடம்“ என்பது அமைந்திருந்தது என்கிறார் பர்ட்டன் ஸ்டெய்ன்.

ஆக, எதிரும் புதிருமான கருத்தியல்கள் வேறுபட்ட இந்த இரு மதங்களுக்கிடையே முரண்பாட்டைக்கொண்டு வந்தன. இந்தச் சமூகங்களோ அதை வன்முறை மூலம் தீர்த்துக் கொள்ளவே முற்பட்டன என்று விளக்கமளிக்கிறார் பர்ட்டன் ஸ்டெய்ன். இந்த விளக்கம், வன்முறைக்கான காரணத்தை முழுமையாக எடுத்துரைக்கவில்லை எனினும் ஏற்கத் தக்கதாகவே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பர்ட்டன் ஸ்டெயினின் கருத்துகளோடு தமிழ் பக்தியின் தன்மை பற்றி ஆராய்ந்த ஜார்ஜ் எல். ஹார்ட் தெரிவித்த முடிவுகளை இணைத்துக்காண்பது அவசியம். தமிழ்ச் சமூகத்தின் மையமாக அரசனே இருந்தான் என்பதையும், வடஇந்தியாவில் கோயிலே மையமாக இருந்தது என்பதையும் ஹார்ட் குறிப்பிடுகிறார். ஆரிய மதத்தின் வருகைக்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட பூர்வ மதமானது இந்த உலகுக்கு அப்பால் பரலோகம் என ஒன்றில்லை எனவும் அதிகாரமானது அங்கிருந்து பெறப்படுவதல்ல எனவும் ஒவ்வொருவரும் தனது தினப்படி வாழ்வில்தான் அதை உணர முடியும் எனவும் நம்பியது.

இங்கு வந்த வடநாட்டு மதமானது இங்கிருந்த பூர்வத் தமிழ்க்குடிகளின் மதமாக மாறுவதற்கு இரண்டு விதமான மாற்றங்களுக்கு உட்பட நேர்ந்தது. அரசனை மையமாகக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் புதிய மதத்தின் கடவுள்களை அரசனின் மாதிரியிலேயே வடிவமைத்தது. “கோயில்” என்ற சொல்லே கூட அதற்கான சான்றுதான். அரசனுக்குச் செய்யப்படும் மரியாதைகள் கடவுளுக்குச் செய்யப்பட்டன. வீர மரணமடைந்த அரசர்களின் நடுகற்களை வணங்கும் பழக்கம் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தினர் அதே விதத்திலேயே புதிய கடவுளையும் அணுகினர். பாணர்கள் ஊர்தோறும் சென்று மன்னர்களை பாடி பரிசல் பெற்றதை பக்தி இயக்க காலத்துப் புலவர்கள் ஊர் ஊராகக் கோயில்களுக்குச் சென்று கடவுளரைப் பாடித் துதித்ததோடு ஒப்பிடலாம். மன்னர்களைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்தப்பட்ட ஆற்றுப்படை போன்ற பா வடிவங்கள் கடவுளரைப் பாடவும் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் அம்சம், தமிழ்ச் சமூகத்தினர் உயிரைப் பறிக்கும் செயலில்தான் அதிகாரம் தங்கியுள்ளது என எண்ணியதாகும். இறந்தவர்களின் ஆவிகளுக்கு ரத்தப் பலியிட்டு வணங்கும் முறை பூர்வ தமிழ்ச் சமூகத்தில் இருந்தது. நரபலி தரும் வழக்கும்கூட தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளது. சுத்தத்திலிருந்து அதிகாரம் வருகிறது என்ற பிராமணியக் கோட்பாட்டுக்கு இது பொருத்தமாக இல்லை. தமக்கு முன்னால் பூசை போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பூர்வ தமிழ்க்குடிகளை அப்பணிகளிலிருந்து அகற்றுவது பிராமணியத்திற்கு அவசியமாயிற்று. புனிதம் என்ற கருத்தாக்கம் ஆவிகள், பலிகள் போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருந்ததால் அதற்கு மாறானவற்றைச் சொல்லி அதிகாரத்தைப் பெற முடியாது என்பதையும் புதிய மதம் அறிந்திருக்கிறது. எனவே புதிய கடவுள்கள் அதே முறைகளை எடுத்துக் கொண்டன. நின்றுபோன தேர் ஒன்றை ஓடச் செய்வதற்காகக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தியைப் பலியிட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

தொல் தமிழ் மக்களின் கோயில்களை அப்படியே செயல்பட அனுமதித்ததோடு புதிய வழிபாட்டுத் தலங்களைப் புதிய மதமானது உருவாக்கிக் கொண்டது. ஒரே கடவுளின் இருவேறு வடிவங்களாக அவை ஏற்கப்பட்டன. இவ்வாறு புதிய மதமானது பூர்வத் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

பூர்வத் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு கூறுகள் பௌத்த, சமண மதங்களால் உள்வாங்கப்பட்டதுபோல தமக்கேற்ற கூறுகளை வைதீக மதம் கையிலெடுத்துக்கொண்டது. தமிழ்ச் சமூகத்தின் பண்புகளில் பல பௌத்த, சமணத்துக்கே பொருத்தமாயிருந்ததால் அதுவே நெடுங்காலம்வரை இங்கு மேலாதிக்கம் செய்தது. அதன்பின்னரே, அவற்றின் சாதகமான அம்சங்களை நகல் செய்தும், வன்முறையைப் பிரயோகித்தும், அரச ஆதரவைப் பெற்றும், வைதீக மதம் மேலோங்கியது என அறிகிறோம்.

பௌத்த, சமண சமயங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டும் மேலதிகமான வன்முறையால் ஒடுக்கப்பட்டது ஏனென்ற கேள்வி இதுவரையிலும் வரலாற்றறிஞர்களால் பதில் காணப்படாததாகவே உள்ளது. ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை இந்த வெறியாட்டங்கள் நடந்தன. ஆனால் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் பௌத்த, சமணர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு மீண்டும் அவர்களை நோக்கி மன்னர்களின் கருணைப் பார்வை திரும்பியது. பல்லவ, பாண்டிய ஆட்சிப் பகுதிகளில் பள்ளிச் சந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் அவர்கள் குகைகளில் சென்று தங்கினர் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

வைதீக மதத்தின் வருகைக்கு முந்தைய, பௌத்த சமணத்தின் வருகைக்கு முந்தைய, பூர்வத் தமிழ்ச் சமூகத்தின் சமத்துவமான பண்பாட்டுக் கூறுகள் சாதகமாகப் பார்க்கப்பட வேண்டியவைதான். அதே நேரத்தில், அச்சமூகத்தில் வன்முறைக்கு அளிக்கப்பட்டிருந்த இடம் இப்போதைய வெறுப்பு அரசியலுக்கு சாதகமாக இருக்கிறதா என்று ஆராயப்படவேண்டும்.

இன்றைய மதவாத வன்முறையின் பரிமாணங்களை விளங்கிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்கள் தமிழ் நாட்டில் பௌத்தமும், சமணமும் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றை மீளாய்வு செய்வது அவசியம். அது, மதவாத வன்முறையின் வேர்களை மட்டுமன்றி, சாதியவாதத்தின் அடிப்படைகளையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கும். இன்றைய இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்கான கருத்தியல் உத்திகளை வகுக்க அந்த ஆய்வு மிக மிக அவசியமாகும்.

பயன்பட்ட நூல்கள்:

1. Sanjay Subramanyam & Kushik Basu (Ed) Unravelling the Nation, Penguin, 1996.

2. Burton Stein, Plenary Session Papers VIII World Tamil Conference – International
Association of Tamil Research, 1995

3. Madhav M. Deshpande & Peter Edwin Hook (Ed) Aryan and Non-Aryan In India, University of Michigan 1979.

4. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D, Cre-A & Harvard University, 2003.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

North India and Tamil Nadu: Some Historical Notes by Dr Ravikumar MP

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

 

வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!

ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி: அமைச்சர் வேண்டுகோள்!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *