பிரக்ஞானந்தா அணி ஆபத்தானது: மாக்னஸ் கார்ல்சன் இப்படி சொல்ல காரணம் என்ன?

விளையாட்டு

இந்திய ஏ மற்றும் பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

5 வயதில் இருந்தே செஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா  7 வயதில் உலக சாம்பியன்யன்ஷிப் பட்டம் வென்றதை தொடர்ந்து எட்டு (2013) மற்றும் பத்து (2015) வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இளம் செஸ் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

2016 ஆம் ஆண்டு உலகின் யங் இன்டர்னேஷனல் மாஸ்டர் (ஐ.எம்) எனும் சிறப்பைப் பெற்ற அவர், 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப்,   ஏப்ரல் 2018ல் ஹெர்க்லியோன் பிஷர் நினைவு கிராண்ட்மாஸ்டர் நார்ம் டோர்னமென்ட்,  2018ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த நான்காவது சர்வதேச கிரெடின் ஓப்பன் செஸ் தொடரில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் உலகிலேயே மிகக் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, மே மாதம் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்தது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது செஸ் ஒலிம்பியாட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். மற்ற நாடுகளில் கலந்துகொண்ட போது எதிர் போட்டியாளர்களை தலைச்சுற்ற வைத்த பிரக்ஞானந்தா  நம் சென்னையில் விளையாடும் போது, குறிப்பாக தமிழகத்துக்கு பெருமையை சேர்க்க தயாராகி வருகிறார். இதனால் அனைவரின் கவனமும் இந்தியா ‘பி’ அணியின் மீதும் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மீதும் குவித்துள்ளது.

இந்தசூழலில் தான் உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்த நிலையில் இந்தியாவின் ஏ மற்றும் பி அணிகள் ஆபத்தானது என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “என்னை பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அவருக்கு எதிராக பிளஸ் ஸ்கோரை எடுத்துள்ளேன். பிரக்ஞானந்தா திறமையான இளம் வீரர். அவர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணியின் மீது பெரும் மதிப்பு உள்ளது.

பிரக்ஞானந்தா, குகேஷ், ரவுனக் சத்வானி, பி. அதிபன், நிஹல் சரின் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்திய ‘பி’ அணி மிக ஆபத்தானது. அவர்கள் மிக வலுவாக உள்ளார்கள் என எண்ணுகிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய ஏ மற்றும் பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

  • க.சீனிவாசன்
+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *