Yஓ.என்.ஜி.சி.க்கு நிலம் தரக் கூடாது!

public

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக காவிரி டெல்டா பகுதியில் கடுமையான மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில்… தலைமைச் செயலக்த்தில் தமிழக முதல்வரை சந்தித்த மத்திய பெட்ரொலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்குவதற்காக 600 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்திற்கு உள்ளூர் மக்களும் ஒத்துழைக்கும்படி அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில், “தமிழக காவிரி பாசன மாவட்டங்களை சீரழித்து சின்னாபின்னமாக்கும் ஒரு திட்டத்திற்கான விதையை வளர்ச்சி என்ற பெயரில் தமிழக முதலமைச்சரிடம் மத்திய அமைச்சர் விதைத்து விட்டு சென்றிருக்கிறார். மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு தலையாட்டி விடுமோ என்ற அச்சம் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. நரிமணத்தில் இப்போது செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரூ.27,460 கோடியில் விரிவாக்குவது தான் மத்திய அரசின் திட்டம். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், வளர்ச்சித் திட்டமாகவும் தோன்றலாம். ஆனால், காவிரிப் பாசன மாவட்டங்களை பிளந்து போட்டு பாலைவனமாக மாற்றும் சதித் திட்டம் தான் இதுவாகும்’’ என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து இன்று(மார்ச் 1) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நரிமணத்தில் இப்போது செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மொத்த சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு 10 லட்சம் டன் மட்டுமே. புதிய திட்டத்தின்படி இதன் திறன் ஒரு கோடி டன்னாக உயர்த்தப்படவுள்ளது. அதாவது இப்போது உள்ள ஆலையைப் போல மேலும் 9 சுத்திகரிப்பு ஆலைகள் அங்கு அமைக்கப்படவுள்ளன. நரிமணத்தில் உள்ள ஒரு சுத்திகரிப்பு ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளே மதிப்பிட முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன. சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இப்போது ஏற்படுவதை விட 10 மடங்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாதிப்பு என்பது அத்துடன் நின்று விடப்போவதில்லை. நரிமணத்தில் உள்ள ஒரு சுத்திகரிப்பு ஆலைக்கு எண்ணெய் வழங்குவதற்காக காவிரிப் பாசன மாவட்டங்களில் மொத்தம் 12 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, மேலும் 21 எண்ணெய்க் கிணறுகளை உடனடியாக அமைக்க ஓ.என்.ஜி.சி. முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலைக்கே கிட்டத்தட்ட 33 எண்ணெய்க் கிணறுகள் தேவைப் படுகின்றன. இதைவிட 10 மடங்கு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்போது அதற்கு தேவையான கச்சா எண்ணெய் வழங்க 300-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும்.

ஒரு எண்ணெய்க் கிணறுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதன்படி 300 கிணறுகளுக்கு 1500 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்த எண்ணெய்க் கிணறுகள் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த எண்ணெய் கிணறுகளில் இருந்து நரிமணம் ஆலைக்கு எண்ணெய் கொண்டு செல்ல குழாய்ப் பாதை அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களிலும் குறுக்கும் , நெடுக்குமாக எண்ணெய்க் குழாய்கள் தான் புதைக்கப்பட்டிருக்கும். அதனால் விவசாயம் செய்ய முடியாது’’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் வாழும் மக்களுக்கும், அங்கு பணியாற்றுவோருக்கும் உள்ளங்கைகளில் வெடிப்பு, தோல் உரிதல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்குள்ள ஆண்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்குள்ளாகவே இறந்து விடுகிறார்கள். கதிராமங்கலத்திலும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதேபோல், 300 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டால் காவிரிப் பாசனப்பகுதி மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறி விடும். அப்படி ஒரு சூழலை நினைக்கவே அச்சமாக உள்ளது.

இந்நிலையில், ” காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும், எண்ணெய்க் கிணறுகளையும் அமைக்கத் துடிக்கும் மத்திய மாநில அரசுகள், மறுபுறம் கடலூர்-நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மண்டலத்தை அமைக்கவுள்ளது. காவிரிப் பாசன மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தித் தரக்கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *