Wஅண்ணாவைக் குளிர்வித்த ஸ்டாலின்!

public

காஞ்சிபுரம் நகரில் உள்ள சின்ன காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது, அண்ணா அறிவாலயம். ஆம்… தன் வீட்டுக்குப் பக்கத்தில் அண்ணா உருவாக்கிய நூலகத்தின் பெயர்தான் அறிவாலயம். அந்தக் காலகட்டங்களில் அண்ணா காஞ்சிபுரத்தில் வந்து வீட்டில் தங்கினால் பட்டு வாங்குவதற்கு, பக்தியோடும் வரும் கூட்டத்தை விட அண்ணாவைப் பார்க்கக் காஞ்சிபுரத்துக்கு வரும் கூட்டம்தான் அதிகமாக இருக்கும்.

அப்போது உடனே அண்ணாவைப் பார்க்க முடியாமல் பல கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த அறிவாலயம் என்னும் நூலகத்துக்குதான் செல்வார்கள். அங்கே திராவிட முன்னேற்றக் கழகப் பத்திரிகைகளைப் படித்துவிட்டு, புத்தகங்களையும் படித்துவிட்டு பின்னர்தான் அண்ணா வீட்டுக்குச் செல்வார்களாம். அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பாவலர் முத்துசாமியும் இந்த அண்ணா அறிவாலயத்தை நிர்மாணித்தவர்களில் முக்கியமானவர்.

இந்த நூலக கட்டடம் பாழடைந்துக் கிடப்பதாகவும், மதுக்கூடமாகவும் சீட்டாடும் இடமாகவும் மாறிவிட்டதாகவும் கடந்த ஜூன் மாதம் கல்கி இதழில் செய்தி வெளிவந்திருந்தது. அது உடனடியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குச் சென்றது. கலைஞர் சென்னையில் அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கு முன்னரே காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட இந்த அண்ணா அறிவாலயத்தைச் சீரமைத்து அதை பழையபடி நூலகம் ஆக்குங்கள் என்று காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு அப்போது உத்தரவிட்டார் ஸ்டாலின்.

இந்நிலையில் இந்த மாதம் 22, 23ஆம் தேதிகளில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக-வினரால் தூர்வாரப்பட்ட குளங்களையும், நீர் நிலைகளையும் மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகப் பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். பயணத்துக்கு முன்னதாக காஞ்சி மாவட்ட திமுக நிர்வாகிகளிடம், அந்த அண்ணா அறிவாலயம் பற்றி விசாரித்திருக்கிறார். தன் பயணத் திட்டத்தில் அதைப் புதிதாக திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.

அதன்படியே அண்ணா வீட்டுக்கு அருகே இருந்த அந்த நூலகம் இப்போது புதுப்பொலிவு பெற்று மாவட்டச் செயலாளர் ஏற்பாட்டில் புதிய நூல்களும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. அண்ணா அறிவாலயத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடப் பணிகளைத் தொடர்ந்து நினைவூட்டிக் கேட்டுவந்த மு.க.ஸ்டாலின் 22ஆம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் புதிய அண்ணா அறிவாலயத்தைத் திறந்து வைத்தார்.

“பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் எங்கள் தலைவர் கருணாநிதி மிகவும் ஈடுபாடு காட்டுவார். இப்போது அதேபோல செயல் தலைவரும் இதுபோன்ற விஷயங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு எங்களைத் தூண்டி, அண்ணா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நூலகத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க உத்தரவிட்டு செயல்படுத்தியுள்ளார். காஞ்சியில் நடந்த இந்த நிகழ்வு அண்ணாவையே குளிர்விப்பதாக அமைந்துவிட்டது’’ என்றனர் காஞ்சி மாவட்டத் திமுக-வினர்.

– ஆரா

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *