Sகட்டிப்பிடி, களவாடு, தப்பியோடு!

public

‘பிரதமர் மோடியைக் கட்டிப்பிடிப்பது; நாட்டைக் களவாடுவது எனச் செயல்பட்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து நிரவ் மோடி, மல்லையாவின் பாணியில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

வங்கிகளில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நிரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ஆம் தேதியே சிபிஐ அறிவித்தது. ஆனால், ஜனவரி 6ஆம் தேதி நிரவ் மனைவி இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். மேலும், அவரது சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.1,300 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நிரவ் மோடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவைச் சூறையாடுவது எப்படி என்பது பற்றி நிரவ் மோடி நாட்டுக்கு வழிகாட்டியுள்ளார். பிரதமர் மோடியைக் கட்டிப்பிடி. பின் டாவோஸ் மாநாட்டில் அவரைச் சந்தித்து பேசு. இதைப் பயன்படுத்தி 12,000 கோடி ரூபாய் மோசடி செய். பின்னர் மல்லையா பாணியில் நாட்டை விட்டுத் தப்பியோடி விடலாம். ஆனால், மத்திய அரசு அவரை வேறு வழிகளில் தேடிக் கொண்டிருக்கும்” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

இதுபோலவே காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடி டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டுக்கு அழைத்துச் சென்ற தொழிலதிபர்கள் குழுவில் நிரவ் மோடி இடம் பிடித்தது எப்படி?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நிரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘நிரவ் மோடியோ, விஜய் மல்லையாவோ பாஜக அரசின் ஆதரவில்லாமல் நாட்டை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்று நம்ப முடியுமா?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மோசடி நடந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ‘இந்த மோசடி அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. தற்போது வெளிவருகிறது. இது நிச்சயமாக 2014இல் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நிரவ் மோடிக்குச் சொந்தமான 17 இடங்களில் நேற்று (பிப்ரவரி 15) வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *