ரேபிட் கிட் கொள்முதலில் ஊழலா? மத்திய அரசு பதில்!

public

கொரோனா தொற்றினைக் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற கருவியை சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கியதில் விலை ரீதியாக முறைகேடுகள் நடந்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்த மெட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக விநியோக உரிமை பெற்ற ரேர் மெட்டாபாலிக் நிறுவனம் தொடுத்த வழக்கின் மூலம் 245 ரூபாய் மதிப்புள்ள இந்த கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும், இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்குத் தெரிந்தே நடந்திருப்பதாகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து மின்னம்பலத்தில் [245 ரூபாய் பொருள் 600 ரூபாய்: அம்பலத்துக்கு வந்த ரேபிட் கிட் ஊழல்!](https://minnambalam.com/public/2020/04/27/40/rapid-kit-scam-corona-virus ) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கோடிக்கணக்கான சகோதர சகோதரிகளின் அளவிட முடியாத துன்பத்திலிருந்து சில பேர் லாபம் ஈட்ட முயற்சிப்பார்கள் என்பது நம்பிக்கை மற்றும் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இந்த மோசடி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு அவமானம். ஊழல்வாதிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு விரைவாக செயல்பட பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

கொரோனா ஊழல் என்ற இந்த முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில் மத்திய அரசு இன்று (ஏப்ரல் 27) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

“இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தனது கொள்முதல் முடிவுகளை எந்த அடிப்படையில் எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். பரிசோதனை என்பது கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும். இந்தப் பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது. இதற்கு உபகரணங்களைக் கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு வழங்குவது அவசியமாகும். உலக அளவில் இந்த உபகரணங்களுக்கு பெருமளவில் தேவை இருப்பதால், பல்வேறு நாடுகள் பண ரீதியிலும், அரசாங்க வழியிலும் அவற்றை வாங்குவதற்கு தங்கள் முழு பலத்தையும், செல்வாக்கையும் ஈடுபடுத்தி வருகின்றன.

இந்த உபகரணங்களை வாங்குவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முதல் முயற்சிக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியில் தேவையான பதில் கிடைத்தது. இதில், உணர்திறன் மற்றும் தனித்திறன் அடிப்படையில், இரண்டு நிறுவனங்கள் (Biomedemics and Wondfo) கொள்முதலுக்காகக் கண்டறியப்பட்டன. இரண்டு நிறுவனங்களும் தேவையான சர்வதேச அளவிலான சான்றிதழைக் கொண்டிருந்தன. Wondfo நிறுவனத்துக்காக மதிப்பீட்டுக் குழு நான்கு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றது. அவை முறையே, ரூ.1204, ரூ.1200,ரூ.844, ரூ.600 ஆகும். அதன்படி, ரூ.600 என்ற விலைக் குறிப்பு எல் 1 ஆகப் பரிசீலிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சீனாவில் உள்ள Wondfo நிறுவனத்திடம் இருந்து ஜிசிஐ மூலம் நேரடியாக உபகரணங்களைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டது. இருப்பினும், நேரடிக் கொள்முதலுக்கான விலைக் குறியீடுகளில் சில பிரச்சினைகள் இருந்தன. விலைக்குறியீடு FOB (Free on Board) முறைப்படி, எடுத்துச் செல்லும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தது. விலைக்குறியீடு எந்தவித உத்தரவாதமும் இன்றி 100% நேரடி முன்பண அடிப்படையில் இருந்தது. காலவரம்பு பற்றிய எந்த ஒப்படைப்புப் பொறுப்பும் இருக்கவில்லை. விலை அமெரிக்க டாலரில் தெரிவிக்கப்பட்டதுடன், விலையில் ஏற்ற இறக்கம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே, எந்தவித முன் பணமும் இன்றி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய FOB (logistics) விலை குறிப்பிட்ட Wondfoவின் உபகரணக் கொள்முதலுக்கான இந்திய விநியோகஸ்தரிடம் இருந்து அவற்றை வாங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு வேறு எந்த இந்திய முகமையும் மேற்கொள்ளாத முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் ஓரளவு உபகரணங்கள் பெறப்பட்டதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கள நிலவர அடிப்படையில் மீண்டும் தரச்சோதனை மேற்கொண்டது. உபகரணங்களின் செயல்பாடு குறித்த அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில் , அவை சரியாகச் செயல்படாதது கண்டறியப்பட்டதும், அவற்றை வாங்குவதற்கான ஆர்டர் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கொள்முதலுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்தத் தொகையும் செலுத்தவில்லை என்பது வலியுறுத்திக் கூறப்பட வேண்டியதாகும். விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதால், (கொள்முதலுக்கு முற்றிலும் முன்பணம் எதுவும் கொடுக்காமல்), மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை” என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *