lமலையேற்றத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்!

public

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றிருந்த 36 பேர் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 10பேர் உயிரிழந்துள்ளனர். 26பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையிலும், அப்பல்லோ, மீனாட்சி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பல்வேறு தலைவர்களும் மலையேற்றத்திற்கு கடுமையான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

**மு.க.ஸ்டாலின், திமுக செயல்தலைவர்**

குரங்கணி காட்டில் மலையேற்றத்திற்காக சென்ற 36 பேர்களில் ஒன்பது பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், சொல்லொனாத் துயரத்திற்கும் ஆளானேன். அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தீக்காயத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் விரைவில் முழுமையான குணம் பெற்று வீடு திரும்புவதற்குத் தேவையான உயர் தர சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். குரங்கணி காட்டுப் பகுதியில் அடிக்கடி இது போன்ற காட்டுத் தீ விபத்து ஏற்படுகிறது என்று தெரிந்திருந்தும், மலையேற்றத்திற்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உரிய வழி காட்டுதல்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் நிச்சயமாகத் தவிர்த்திருக்க முடியும்.ஆகவே, இனி வரும் காலங்களில் மலையேற்றத்திற்கு குரங்கணி காட்டுப்பகுதிக்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும் என்றும்; இன்னும் மீட்கப்பட வேண்டியவர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

**தினகரன், சட்டமன்ற உறுப்பினர்**

தேனி குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளது, மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். போடி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு மேல் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடாமலும், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்.

இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு, வழிகாட்டிகள் நியமனம் போன்ற விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாக கடைபிடிக்கவேண்டும்.

**ஜவாஹிருல்லா, மமக**

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர் விரைவில் முழுமையான குணம் அடைய பிரார்த்திக்கிறேன்.

குரங்கணி விபத்து தந்துள்ள படிப்பினைகளை கவனத்தில் கொண்டு டிரெக்கிங் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**ராமதாஸ், பாமக நிறுவனர்**

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றவர்களில் 10 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் சென்னையையும், 3 பேர் ஈரோட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டுத் தீ எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் மலையேற்றக் குழுவினர் மலையேற்றப் பயிற்சிக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. வனத்துறையிலும் போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் வனப்பகுதிகளில் முழுமையான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட முடியவில்லை என்று அத்துறை அதிகாரிகள் கூறும் போதிலும் அந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.

சாகசம் படைக்கும் நோக்குடன் சென்ற மாணவர்களும், இளைஞர்களும் சடலமாக திரும்புவது சகித்துக் கொள்ள முடியாத சோகமாகும். இனியாவது இத்தகைய சோக நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு மலையேற்றத்தை ஒழுங்கு படுத்தவும், வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

**தமிழிசை, தமிழக பாஜக தலைவர்**

கடவுளே….தீயிலிருந்து..காப்பாற்றப்பட்டவர்களைக்காப்பாற்று……தீக்காயத்திற்கான சிகிச்சையை அவர்கள் உடல்ஏற்று..உயிர்காக்கட்டும்…..

இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *