K2ஜி: பாஜக மன்னிப்பு கேட்குமா?

public

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “2ஜி என்ற தவறான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கும், நாட்டையே தவறாக வழிநடத்தியதற்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பார்களா?” என்று பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த அந்த விழாவில் கூட, பிரதமர் மோடி பற்றியும் பாஜக ஆட்சி பற்றியும் தனது உரையில் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதேபோன்ற குரலை, நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் வெளிப்படுத்தினார். .

ராகுல் காங்கிரஸ் தலைவரான பிறகு பங்கேற்கும் முதல் காரிய கமிட்டி கூட்டம் என்பதால், இது அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, மல்லிகார்ஜுனா கார்கே, அம்பிகா சோனி, கமல்நாத் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், பல மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

2ஜி பற்றிய உண்மைகள் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ராகுல், ”கற்பனையாகப் புனையப்பட்ட தவறான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கும், நாட்டையே தவறாக வழிநடத்தியதற்கும், அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பார்களா?” என்று பிரதமர் மோடி மற்றும் பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 2ஜி ஊழலில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டே பாஜக தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான அம்சமாக இருந்தது. தற்போது 2ஜி வழக்கு தீர்ப்பு வெளியான நிலையில் அதுகுறித்து கேட்டிருக்கிறார் ராகுல்.

தொடர்ந்து பேசியவர், ”மக்களின் உடைமைகளை திருடுவதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ஆனது. இப்போது ஒவ்வொரு பொய்யாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மாற்றப்பட்டு, ஒரு தொழிலதிபருக்கு பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, நாங்கள் மூன்று கேள்விகள் கேட்டோம். இதுவரை, அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.

நீங்கள் 2ஜி பற்றி பேசினீர்கள். அனைவரது வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று வாக்குறுதி தந்தீர்கள். மோடியின் நிர்வாகத் திறமைக்கு குஜராத் ஒரு முன்மாதிரி என்றீர்கள். இது மட்டுமல்ல பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரி (Gabbar Singh Tax) என்று நீங்கள் சொன்ன எல்லாமே பொய் என்று ஆனது. மோடியின் குஜராத் மாதிரியைப் பார்த்தால், அது பொய் என்பது தெளிவாகத் தெரியவரும். நாங்கள் குஜராத்துக்கு சென்றபோது, அங்கு மாதிரி என்று எதுவுமில்லை. மக்களின் உடைமைகளைத்தான் அவர்கள் கொள்ளையடிப்பதாகச் சொன்னார்கள்.

அமித் ஷாவின் மகன் மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் ரூபாயை 80 கோடியாக மாற்றியிருக்கிறார். இதுபற்றி எதுவுமே கூறாமல், இதுவரை மோடி மவுனமாக இருக்கிறார்” என்று தனது பேச்சில் தெரிவித்தார்.

இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த ராகுல், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடுகளில் இறங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *